பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

353


முரட்டுத்தனமாக, குரோத உணர்ச்சியுடனேயே பேசுவான். அவன் பயங்கரமான குறுகிய மனப்பான்மைக்கு ஆளாகியிருந்தான்.”

அவள் புன்னகை செய்தாள்; தனது பளபளக்கும் கண்களால் அவர்களை மீண்டும் ஒரு முறை பார்த்தாள்.

“இப்போதோ அவன் ‘தோழர்களே!'” என்று அழைக்கிறான். அவன் அந்த வார்த்தையை எப்படிச் சொல்கிறான் என்பதை நீங்கள் பார்க்க வேண்டுமே! ஒருவித அடக்கமும் அன்பும் கலந்த பாவத்தோடு அழைக்கிறான் அந்த பாவத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது, அவன் வியக்கத் தக்க முறையில் மாறிவிட்டான். படாடோபமே இல்லை. நேர்மையான ஈடுபாடும். உழைக்கவேண்டும் என்ற ஆர்வமும் அவன் மனத்தில் நிரம்பியிருக்கின்றன. அவன் தன்னைத் தானே உணர்ந்து கொண்டுவிட்டான். அவனது குறைகளையும் நிறைகளையும் அவன் நன்கு தெரிந்துகொண்டு விட்டான். அவனிடம் காணப்படும் முக்கிய மாறுதல் இதுதான்; அவனிடம் ஒர் ஆழ்ந்த தோழமையுணர்ச்சி தோன்றியிருக்கிறது.”

சாஷா பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த தாய்க்கு ஓர் உண்மை புலப்பட்டது. சாஷாவைப் போன்ற நெஞ்சழுத்தமுள்ள ஆசாமி கூட, சமயம் ஏற்பட்டால் குதூகலமும் இங்கிதமும் நிறைந்து விளங்க முடியும் என்பதை உணர்ந்து உள்ளூர மகிழ்ந்துகொண்டாள். ஆனால், அதே வேளையில் அவளது இதயத்தின் அடியாழத்தில் அவள் பொறாமை யுணர்ச்சியோடு எண்ணிக்கொண்டிருந்தாள்.

“பாவெலுக்கு மட்டும் என்னவாம்?”

“அவன் தன் தோழர்களைப் பற்றி மட்டுமே நினைக்கிறான்” என்று தன் பாட்டில் நிக்லாயைப் பற்றியே பேசத் தொடங்கினாள் சாஷா. அவன் என்னிடம் என்ன சொல்ல வந்தான் தெரியுமா? சிறையிலுள்ள மற்ற தோழர்களைத் தப்பியோடச் செய்யும் விஷயத்தைப் பற்றிச் சொன்னான். அந்தக் காரியம் ரொம்பக் களுவானது என்று அவன் சாதிக்கிறான்.”

சோபியா தலையை உயர்த்தி ஆர்வத்தோடு பேசினாள்:

“அதுவும் ஒரு நல்ல யோசனைதான். சாஷா! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

தாயின் கையிலிருந்த தேநீர்க் கோப்பை நடுநடுங்கியது. சாஷா தன் புருவங்களைச் சுருக்கி விழித்துத் தனக்கு ஏற்பட்ட உத்வேக உணர்ச்சியை உள்ளடக்க முயன்றாள். ஒரு கணம் கழித்து, அவள் தீர்மானமான குரலில், எனினும் இனிய புன்னகையோடு பேச முனைந்தாள்: