பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

மக்சீம் கார்க்கி


அவரது தொல்லைகளையெல்லாம் வாழ்வின் கசப்பையெல்லாம் உன்னையடிப்பதன் மூலம் அவர் தீர்த்துக்கொண்டார் என்று இப்போது உணர்கிறேன் நான். கசப்புணர்ச்சிதான் அவரை ஆட்கொண்டிருந்தது. ஆனால் இந்த மாதிரிக் கசப்பும் தொல்லையும் எங்கிருந்து வருகின்றன என்பதை அவர் அறிந்துகொள்ளவே இல்லை. அவர் முப்பது வருஷகாலமாய் உழைத்தார்; இந்தத் தொழிற்சாலை இரண்டு கட்டிடங்களாக இருந்த காலத்திலிருந்து அவர் வேலை பார்த்தார். இப்போழுதோ அவை ஏழு கட்டிடங்களாகப் பெருகிவிட்டன.”

அவன் சொல்வதை ஆர்வத்தோடும் பயத்தோடும் அவள் கேட்டாள். மகனின் கண்கள் அழகாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. தன் மார்பை மேஜையின்மீது சாய்த்தவாறு கண்ணீர் படிந்து ஈரம் பாய்ந்த அவளது முகத்துக்கு நேராகக் குனிந்து, தான் புரிந்துகொண்டுள்ள உண்மையைப் பற்றி பிரசங்கத்தைத் தொடங்கினான் பாவெல். இளமையின் முழுப்பலத்தோடும், மாணவன் ஒருவனது அறிவின் அகந்தையோடும் உண்மையின் மீதுள்ள பரிபூரண விசுவாசத்தோடும் தனக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்த விஷயங்களைப் பற்றி அவன் பேசினான். தாய்க்காகப் பேசியதை விடத் தன்னைப் பரீட்சித்துக் கொள்ளவே அவன் பேசினான். சில வேலைகளில் அவன் வார்த்தைகள் கிடைக்காமல் பேச்சை நிறுத்தினான். அப்போது கண்ணீர்த் திரைக்கு அப்பால் ஒளி செய்யும் அன்பான கண்களைக் கொண்ட, தன் தாயின் வேதனை நிறைந்த முகம் தன்னெதிரே இருப்பதை உணர்ந்து கொண்டான். அந்தக் கண்கள் அவனைப் பயத்தோடும் வியப்போடும் பார்த்தன. அவனோ தன் தாய்க்காக அனுதாபப்பட்டான்; மீண்டும் பேச ஆரம்பித்தான். இப்போதோ, அவன் அவளைப் பற்றியும் அவளது வாழ்வைப் பற்றியுமே பேசினான்.

“இதுவரை நீ என்ன சுகத்தைத்தான் அனுபவித்திருக்கிறாய்? நீ சிந்தித்து மகிழ்வதற்கு சென்று போன உன் வாழ்க்கையில் என்ன இருக்கிறது?” என்று கேட்டான்.

அவள் கேட்டுக்கொன்டிருந்தாள். தலையை மட்டும் சோர்வாய் ஆட்டினாள். இதுவரை அறியாத புதுமையான உணர்ச்சி, இன்பமும் துன்பமும் கலந்த ஏதோ ஒரு உணர்ச்சி தனது நொந்து போன இதயத்துக்குள் குடிபுகுந்து அதை இதப்படுத்திச் ககமூட்டுவதுபோல அவளுக்குத் தோன்றியது. அவளைப் பற்றியும் அவளது வாழ்க்கையைப் பற்றியும் யாரேனும் பேசுவதைக் கேட்பது, இதுதான் அவளுக்கு முதல் தடவை. மகனது வார்த்தைகள் அவளது மங்கி மக்கிப்போன பழைய நினைவுகளை, எந்தக் காலத்திலேயோ