பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

மக்சீம் கார்க்கி


"சவச் சடங்கைக்கூட தோழர்களின் இஷ்டம்போல் நடத்துவதற்கு விடமாட்டேனென்கிறார்கள்” என்று அவள் ஆக்ரோஷத்தோடு சொன்னாள். “இது ஓர் அவமானம்!”

வெறுப்புணர்ச்சி மேலோங்கியது. ஜனங்களது தலைகளுக்கு மேலாகச் சவப்பெட்டியின் மூடி அசைந்தது; அதிலுள்ள சிவப்பு நாடாக்கள், காற்றில் அசைந்தாடின. அந்தப் பட்டுநாடாக்கள் ஜனத்திரளுக்கு மேலாகப் படபடத்து ஒலித்தன.

போலீசாருக்கும் ஜனக்கூட்டத்துக்கும் கலவரம் ஏற்படக்கூடும் என்ற பயம் தாயின் மனத்தில் ஏற்பட்டது. எனவே அவள் ஏதேதோ முணுமுணுத்துக்கொண்டே அங்குமிங்கும் விறுவிறென நடந்து திரிந்தாள்.

“அவர்கள் அப்படி விரும்பினால் அவர்கள் இஷ்டப்படியே நடந்து தொலையட்டுமே! வேண்டுமானால், அவர்கள் அந்த நாடாக்களை எடுத்துக்கொள்ளட்டுமே! நாம்தான் கொஞ்சம் விட்டுக்கொடுப்போமே!”

யாரோ ஒருவனின் கூர்மையும் பலமும் கொண்ட குரல் அங்கு நிலவிய சப்தத்தை விழுங்கி மேலோங்கி ஒலித்தது:

“எங்களது தோழனை, உங்களது சித்திரவதையால் உயிர் நீத்த எங்களது தோழனை கல்லறைக்கு வழியனுப்பி வைக்கும் எங்கள் உரிமையைத்தான் நாங்கள் கோருகிறோம்......”

ஓர் உரத்த பாட்டுக்குரல் ஒலிக்க ஆரம்பித்தது:


இணையும் ஈடும் இல்லாத
இந்தப் போரில் நீங்களெல்லாம்
பணயம் வைத்தே உம்முயிரைப்
பலியாய்க் கொடுத்தீர் கொடுத்தீரே!.

“நாடாக்களை எடு! அவற்றை வெட்டித்தள்ளு, யாகவ்லெவ்!”

உருவிய வாள்வீச்சு ஒலித்து இரைந்தது. கூச்சல்களை எதிர்பார்த்து தாய் தன் கண்களை மூடிக்கொண்டாள். ஆனால் ஜனங்களோ முணுமுணுக்கத்தான் செய்தார்கள்; சீற்றங்கொண்ட ஓநாய்களைப்போல் உறுமினார்கள். பிறகு அவர்கள் மௌனமாகத் தங்கள் தலைகளைத் தொங்கப்போட்டவாறே விலகி நடந்தார்கள். அவர்களது காலடியோசை தெரு முழுதும் நிரம்பி ஒலித்தது.

அலங்கோலமாக்கப்பட்ட சவப்பெட்டியின் மேலிருந்து கசங்கிப்போன பூமாலைகள் ஜனக்கூட்டத்தின் தலைகளுக்கு மேலாக உதிர்ந்து மிதந்தன. அவர்களுக்குப் பக்கத்தில் குதிரைப் போலீஸ்காரர்கள்