பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

மக்சீம் கார்க்கி


ஆனால் தனக்கு மிகவும் அத்தியாவசியமான அருமையான நெருங்கிய ஏதோ ஒன்றைத்தான் அவர்கள் புதைக்கப் போவதாக அவளுக்குப்பட்டது. அவன் நிராதரவான உணர்ச்சிக்கு ஆளானாள்; அந்தக் காரியத்துக்கு, தான் அன்னியமாகப் போனது மாதிரி உணர்ந்தாள். இகோரை வழியனுப்பும் இந்த மனிதர்களுடன் ஒத்துப்போகாத ஒரு சமனமற்ற கவலையுணர்ச்சி அவள் இதயத்தில் திரம்பி நின்றது.

“உண்மைதான், இகோர் கடவுள் இருப்பதாக நம்பியதில்லை; இந்த மனிதர்களும்தான் நம்பவில்லை.....” என்று அவன் தனக்குள் நினைத்துக்கொண்டாள்.

அந்த எண்ணத்தையே மேலும் மேலும் தொடர விரும்பவில்லை. தனது இதயத்தை அழுத்திக்கொண்டிருக்கும் பெரும் பார உணர்ச்சியிலிருந்து விடுபடுவதற்கு முயன்றவாறே அவள் பெருமூச்செறிந்தாள்.

“கடவுளே! அருமை ஏசுநாதரே! நானும் கூடவா இப்படி இருப்பேன்......”

அவர்கள் இடுகாட்டை அடைந்தார்கள். சமாதிகளுக்கு மத்தியில் செல்லும் ஒடுங்கிய நடைபாதைகளைச் சுற்றி வளைத்து நடந்து, கடைசியாக, சிறு வெள்ளைநிறச் சிலுவைகளாகக் காணப்படும் ஒரு பரந்த வெட்ட வெளிக்கு வந்து சேர்ந்தார்கள். சவக்குழியைச் சுற்றி அவர்கள் மௌனமாகவே குழுமினார்கள், சமாதிகளுக்கு மத்தியில் வந்துசேர்ந்த அந்த உயிருள்ள மனிதர்களின் ஆழ்ந்த மௌனம், வெகு பயங்கரமாக தோன்றியது. இந்தப் பயங்கரச் சூழ்நிலை தாயின் இதயத்தை நடுக்கியது. அந்தச் சிலுவைகளுக்கு ஊடாகக் காற்று ஊளையிட்டு, இரைந்து வீசிற்று; சவப்பெட்டியின் மீது கிடந்த கசங்கிய மலர்களை உலைத்தெறிந்தது.

போலீஸ்காரர்கள் அணிவகுத்து நின்று தங்கள் தலைவனையே பார்த்தவாறு நின்றார்கள். கரிய புருவங்களும், நீளமான தலைமயிரும், நெடிய தோற்றமும்கொண்ட ஒரு வெளிறிய வாவிபன் சவக்குழியின் தலைமாட்டருகே போய் நின்றான். அதே சமயத்தில் அந்தப் போலீஸ் அதிகாரியின் முரட்டுக் குரல் சத்தமிட்டது!

“பெரியோர்களே.....”

“தோழர்களே!” என்று அந்தக் கரிய புருவமுடைய இளைஞன் தெளிந்த உரத்த குரலில் பேசத் தொடங்கினான்.

“ஒரு நிமிஷம்” என்றான் அதிகாரி, “இங்கு நீங்கள் எந்தவிதமான பிரசங்கமும் செய்ய நான் அனுமதிக்க முடியாது. எனவே உங்களை எச்சரிக்கிறேன்.”