பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

23


இந்த மாதிரி மனிதர்களைப் பற்றிய எண்ணம் அவனது தாய்க்குப் பயத்தைக் காட்டியது எனினும் நிலைமை இப்படித்தானா இருக்கிறது’ என்பதை அவள் மீண்டும் கேட்க விரும்பினாள்; ஆனால் கேட்கத் துணியவில்லை. தனக்குப் புரியாத மனிதர்களைப் பற்றிய - எனினும் தன் மகனை இந்த மாதிரியான பயங்கரமான விஷயங்களைப் பற்றிப் பேசவும் சிந்திக்கவும் கற்றுக்கொடுத்த அந்த மனிதர்களைப் பற்றிய- கதைகளை மகன் சொல்லும்போது திணறிப்போன மூச்சோடு அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தாள். கடைசியாக அவனைப் பார்த்துச் சொன்னாள்;

“சரி, பொழுது சீக்கிரம் விடியப்போகிறது. நீ போய்ப் படு; கொஞ்ச நேரமாவது தூங்கு போ.”

“நான் இப்போதே படுக்கப் போகிறேன்’ என்றான் அவன். பிறகு அவளை நோக்கிக் குனிந்து கொண்டே ‘நான் சொன்னதையெல்லாம் புரிந்து கொண்டாயா?” என்று கேட்டாள்.

“ஆமாம்” என்ற ஒரு பெருமூச்சுடன் பதில் சொன்னாள் அவள். மீண்டும் அவளது கண்ணில் கண்ணீர் சொரிந்து வழிய ஆரம்பித்தது. “இதெல்லாம் உன் அழிவு காலத்திற்குத்தான்!” என்று தேம்பினாள்.

அவன் எழுந்து அறைக்குள் நடமாடினான்.

“சரி, இப்போது நான் எங்குப் போகிறேன். என்ன செய்கிறேன் என்பது உனக்குத் தெரியும். உனக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். நீ என்னை நேசிப்பது உண்மையானால், இனிமேல் இதில் தலையிடாதே அம்மா!” என்றான் அவன்.

“கண்ணே! என் கண்ணே! இதை நீ என்னிடம் சொல்லாமல் இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் போலிருக்கிறதே!” என்று கத்தினாள் அவள்.

அவன் தாயின் கரத்தை எடுத்து இறுகப் பிடித்து அழுத்தினான்.

அவன் அன்போடு ‘அம்மா’ என்று அழைத்த சொல்லாலும், அவளது கரத்தை இதுவரை இல்லாத இனிய வாஞ்சையோடு அழுத்திப் பிடித்ததால் ஏற்பட்ட சுக உணர்ச்சியாலும் அவள் மெய்மறந்து போய்விட்டாள்.

“சரி, நான் இதில் தலையிடவில்லை” என்று தட்டுத் தடுமாறிச் சொன்னாள் அவள். “நீ மட்டும் உன்னை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளப்பா. ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்”. தனது மகனுக்கு எந்தவிதமான ஆபத்து காத்து நிற்கிறது என்பதை அறிய முடியாமல், மீண்டும் அவள் வருத்தத்தோடு சொன்னாள். “நீ நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வருகிறாய்!"