பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

25


“கிறிஸ்து ரட்சகரேமூமூநீ மிகவும் பயங்கரமாகத்தான் மாறிவிட்டாய்!” என்று சொல்லி அவள் மகனை லேசாகப் பார்த்தாள்.

அவன் நன்றாக தூங்கிய பிறகு, அவள் தன் படுக்கையிலிருந்து மெதுவாக எழுந்து அவனருகே சென்றாள். பாவெல் மல்லாக்கப் படுத்திருந்தான். உறுதியும் திண்மையும் உரமும் பாய்ந்திருந்த அவனது பிடிவாதத் தோற்றம் கொண்ட பழுப்பேறிய, கடுமையான முகம், வெள்ளை நிறமான தலையணையில் துலாம்பரமாகத் தெரிந்தது. அவனது தாய் காலில் ஜோடு எதுவும் அணியாமல் இரவு ஆடையில் அங்கு நின்றாள். அவளது கைகள் மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தன; உதடுகள் சப்தமின்றி அசைந்தன; கன்னங்களில் பெருகும் கண்ணீர்த்துளிகள் மெதுவாக உருண்டு வழிந்து கொண்டிருந்தன.

5

தூரத்து உறவினர்களாக, நெருங்கியவர்களாக மீண்டும் அவர்கள் இருவரும் தங்கள் மோன வாழ்க்கையையே நடத்திவந்தார்கள்.

வாரத்தின் இடையில் வந்த ஒரு விழா நாளன்று, பாவெல் வீட்டைவிட்டு வெளியே கிளம்பும் சமயத்தில் தாயிடம் சொன்னான்.

“சனிக்கிழமையன்று நகரிலிருந்து சிலர் என்னைப் பார்க்க வருவார்கள்” என்றான்.

“நகரிலிருந்தா?” என்று திரும்பக் கேட்டுவிட்டுத் திடீரென அவள் தேம்பினாள்.

“எதற்கென்று அழறே?” என்று பதறிப்போய்க் கேட்டான் பாவெல்.

ஆடையால் அவள் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“தெரியாது. சும்மா.......”

“பயமா இருக்கா?”

“ஆமாம்” என்று அவள் ஒப்புக்கொண்டாள்.

அவளருகே குனிந்து அவளது தந்தை பேசுகிற மாதிரி கரகரத்த குரலில் அவன் சொன்னான்.

“பயம்தானம்மா நம்மையெல்லாம் அழித்துவிடுகிறது. நம்மை அதிகாரம் பண்ணி ஆளுகிறார்களே, அவர்கள் நமது பயத்தை வைத்துத்தான் காரியம் சாதிக்கிறார்கள். மேலும் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.”

“கோபப்பட்டுக் கொள்ளாதே” என்று உவகையற்றுப் புலம்பினாள் அவள். “நான் எப்படிப் பயப்படாமல் இருப்பது? என் வாழ்க்கை