பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“இருக்கலாம்; ஆனால் இங்கு அப்படி ஒருவருமே இல்லை. அதுதான் விஷயம்” என்று எதையோ நினைத்துக்கொண்டு சொன்னான் ஸ்திபான்.

“ஏன் இங்கேயும் கூட நண்பர்களை நாம் தேடிக்கொள்ளக் கூடாதா?”

ஸ்திபான் பதில் சொல்வதற்கு முன் ஒரு கணம் யோசித்தான். பிறகு சொன்னான்:

“ஹூம்! ஆமாம், தேடித்தான் பார்க்க வேண்டும்.”

“சரி, உட்காருங்கள், சாப்பாடு தயார்” என்று அழைத்தாள் தத்யானா.

தாய் தங்களிடம் கூறிய பேச்சினால் இழுக்கப்பட்டு சிந்தை இழந்திருந்த பியோத்தர் சாப்பிடும்போது மீண்டும் உற்சாகம் பெற்றான்.

“அம்மா, நீங்கள் அதிகாலையிலேயே போய்விட வேண்டும். அப்போதுதான் யார் கண்ணிலும் படாமல் போகலாம்” என்றான் அவன்; “பக்கத்து ஊர்வரையிலும், வண்டியிலேயே போக வேண்டும். ஆனால் நகருக்குள் போகக்கூடாது. ஒரு தபால் வண்டியை அமர்த்திக் கொள்ளுங்கள்.”

“அவள் ஏன் அமர்த்த வேண்டும்? நானே அவளுக்கு வண்டியோட்டுகிறேன்” என்றான் ஸ்திபான்.

“இல்லை. நீ ஓட்டக்கூடாது. அவர்கள் யாராவது உன்னைப்பார்த்து. ‘இவள் இரவு உன் வீட்டில் தங்கினாளா?’ என்று கேட்டால். நீ என்ன சொல்வாய்? ‘ஆமாம், தங்கினாள்’ என்பாய். ‘இப்போது எங்கே போகிறாள்?’ என்றால், ‘நான் அவளைப் பக்கத்து ஊர்வரையிலும் கொண்டுவிடப் போகிறேன்’ என்பாய். உடனே, ‘ஓஹோ, நீதான் அவள் தப்பித்துக்கொண்டு போக வழி செய்தாயா?’ என்று சொல்வார்கள்; ‘அப்பறம் நீ சிறைக்குப் போக வேண்டியதுதான்,’ சிறைக்குப் போவதற்கு இப்போது ஒன்றும் அவசரமில்லை, எல்லாம் அதனதன் காலத்தில்தானே நடக்கும். சாகிற காலம் வந்துவிட்டால் ஜார் அரசனும்கூட சாகத்தான் செய்வான் என்பது பழமொழி. ஆனால் நான் சொல்கிறபடி செய்தால், அவளாக எங்கோ. இரவைக் கழித்துவிட்டு, ஒரு வண்டியை அமர்த்திக்கொண்டு போவது மாதிரி இருந்தால் நல்லது. நம்முடைய கிராமம் ராஜபாட்டைக்கு அருகிலிருப்பதால், எத்தனையோ பேர் இரவில் இங்குத் தங்கிப் போவார்கள்.”

“பியோத்தர்! இவ்வளவு தூரம் பயப்படுவதற்கு நீ எங்கே கற்றுக்கொண்டாய்?” என்று குத்தலாகக் கேட்டாள் தத்யானா.