பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

27


நடந்து வரும் காலடியோசை தன் வீட்டைச் சூழ்ந்து நெருங்கிவிட்டதாகவும், சுவரில் விரல்கள் தட்டுத்தடுமாறித் தடவுவதாகவும் அவள் உணர்ந்தாள்.

யாரோ சீட்டியடித்து ராகம் இழுப்பது அவளுக்குக் கேட்டது. அந்த சீட்டிக்குரல் அமைதியினூடே மெல்லியதாகப் பாய்ந்து வந்தது. அது சோகமும், இனிமையும் கொண்டதாகப் பாழ் இருளுக்குள் எதையோ தேடித் தேடித் திரிவதாகப் பட்டது. வரவர அந்தக் குரல் நெருங்கிவந்து, கடைசியில் அவளது வீட்டு ஜன்னலைக் கடந்து சுவரின் மரப்பலகையையும் துளைத்து ஊடுருவி உள்ளே நுழைந்துவிட்டதாகத் தோன்றியது.

பலத்த காலடியோசை வாசற்புறத்தில் கேட்டது. தாய் திடுக்கிட்டு எழுந்து நின்றாள். அவளது புருவங்கள் உயர்ந்து நெளிந்தன.

கதவு திறந்தது. பெரிய கம்பளிக் குல்லாய் தரித்த ஒரு தலை முதலில் தெரிந்தது. அதன்பின் அந்தச் சின்ன வாசல் வழியாக ஒரு உயரமான ஒல்லியான உடம்பு குனிந்து நுழைந்தது. உள்ளே வந்தபின் அந்த உருவம் நிமிர்ந்து நின்று தனது வலது கையை உயர்த்தி மரியாதை செலுத்திற்று. பிறகு பெரு மூச்சுவிட்டு, அடித்தொண்டையில் பேசியது.

“வணக்கம்",

தாய் பதில் பேசவில்லை; வணங்கமட்டும் செய்தாள்.

“பாவெல் இல்லையா?”

வந்தவன் மெதுவாகத் தனது கோட்டை அகற்றினாள். ஒரு காலை லேசாக உயர்த்தி அதில் படிந்திருந்த பனித்துளிகளைக் குல்லாயினால் துடைத்துவிட்டான்: மறு காலையும் உயர்த்தி இது மாதிரியே செய்தான். பிறகு தொப்பியைக் கழற்றி ஒரு மூலையில் விட்டெறிந்தான். அறைக்குள் உலாவ ஆரம்பித்தான். ஒரு நாற்காலியை, அதற்குத் தன்னைத் தாங்கச் சக்தியுண்டா என்று பார்ப்பதுபோல, அப்படியும் இப்படியும் பார்த்துவிட்டு, பின்னர் அதில் உட்கார்ந்தான். வாயை ஒரு கையால் மூடிக்கொண்டு கொட்டாவிவிட்டான். அவனது தலை அழகாகவும் உருண்டையாகவும் கட்டையாகவும் வெட்டிவிடப்பட்ட கிராப்புடனும் இருந்தது. அவனது முகம் மழுங்கச் சவரம் செய்யப்பட்டு கீழ் தொங்கிப் பார்க்கும் முனைகளைக் கொண்ட மீசையுடனிருந்தது. துருத்தி நிற்கும் தனது சாம்பல் நிற அகலக் கண்களால் அவன் அந்த அறையைக் கவனத்தோடு சுற்றுமுற்றும் பார்த்தான்.

“இது என்ன சொந்தக் குடிசையா? இல்லை, வாடகை இடமா? என்று கால்மேல் கால் போட்டு, நாற்காலியை முன்னும், பின்னும் ஆட்டிக்கொண்டே கேட்டான் அவன்.