பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

மக்சீம் கார்க்கி


எல்லோரும் அமைதியானார்கள். சில விநாடிகள்வரையிலும் கரகரவென்று எழுதிச் செல்லும் பேனாவின் சத்தத்தையும், அவளது இதயத் துடிப்பையும் தவிர வேறு எதையுமே தாய் கேட்கவில்லை.

பிரதம நீதிபதியும் அடுத்தாற்போல் என்ன நடக்கப்போகிறது என்பதையே கவனித்துக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அவரது உதவி நீதிபதிகளும் நிலையிழந்து அசைந்து. கொடுத்தார்கள். முடிவாக அவர் சொன்னார்”ஹும்..... அந்திரேய், நரோத்கா! நீங்கள் குற்றவாளி என்று ஒத்துக்கொள்கிறீர்களா?”

அந்திரேய் மெதுவாக எழுந்தான் நிமிர்ந்து நின்றான். மீசையை இழுத்துவிட்டான், தன் புருவங்களுக்குக் கீழாக, அந்தக் கிழ நீதிபதியைப் பார்த்தான்:

“நான் எப்படி என் குற்றத்தைக் கூறமுடியும்?” என்று நிதானமாக இனிமையாக தோள்களை உலுப்பிக்கொண்டே கூறினான் அந்திரேய். “நான் யாரையும் கொலை செய்யவில்லை; எதையும் திருடவில்லை. ஆனால் ஒருவரையொருவர் திருடவும், கொலை செய்யவும் தூண்டிவிடும் இந்த வாழ்க்கை அமைப்புத்தான் நான் எதிர்க்கிறேன்.”

“சுருக்கமாகப் பதில் சொல்க” என்று அந்தக் கிழவர் சிரமப்பட்டுச் சொன்னார்.

தனக்குப் பின்னால் உள்ள பெஞ்சிகளிலுள்ளவர்கள் பரபரத்துக் கொண்டிருப்பதைத் தாயால் உணர்ந்துகொள்ள முடிந்தது. ஜனங்கள் குசுகுசுத்து ரகசியம் பேசினார்கள், அங்குமிங்கும் அசைந்தார்கள்; அந்த வெள்ளை மூஞ்சி ஆசாமியின் பேச்சினால் தம்மீது படர்ந்துவிட்ட தூசி தும்புகளைத் துடைத்துவிடுவது போலவும் நடந்துகொண்டார்கள்.

“அவர்கள் சொல்வதைக் கேள்” என்று சிஸோவ் ரகசியமாகச் சொன்னான்.

“பியோதர் மாசின், பதில் சொல்லுங்கள்......”

“முடியாது. சொல்லமாட்டேன்” என்று துள்ளிக்கொண்டு கூறினான் பியோதர். அவனது முகம் சிவந்து போய்விட்டது. கண்கள் பிரகாசமடைந்தன்: என்ன காரணத்தினாலோ அவன் தன் கைகளைப் பின்புறமாகக் கட்டிக் கொண்டிருந்தான்.

சிஸோவ் மூச்சடைத்துப் போனான். தாயின் கண்கள் வியப்பினால் அகலவிரிந்தன.

“எனக்காக வக்காலத்துப் பேச நான் வக்கீலை அமர்த்தவும் இல்லை: நான் எதுவும் சொல்லவும் மறுக்கிறேன், இந்த விசாரணையே சட்ட