பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

495


“இவ்வளவுதானா? வேறொன்றும் இல்லையா?”

“இல்லை ”

அவளால் அதை நம்ப முடியவில்லை.

சமோய்லவின் தாய் தனது இடத்தில் நிலைகொள்ளாமல் தவித்துப் புழுங்கினாள். பெலகேயாவை முழங்கையாலும் தோளாலும் இடித்துத் தள்ளினாள்.

“இதென்ன இது? இப்படியா நடக்கும்?” என்று தன் கணவனை நோக்கிக் கேட்டாள் அவள்.

“நீ தான் பார்த்தாயே. இப்படித்தான் நடக்கும்.”

“கிரிகோரியுக்கு என்ன தண்டனை கொடுப்பார்கள்?”

“சும்மா இரு”

ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிளவை, ஏதோ ஒரு முறிவை, ஏதோ ஒரு குழப்பத்தை உணர்ந்திருந்தார்கள். அடி முடி காண முடியாத ஏதோ ஒரு சொக்கப்பனையின் ஒளியை, அதனுடைய இனம் தெரியாத அர்த்த பாவத்தை, அதனது தடுத்து நிறுத்த முடியாத அசுர சக்தியைக் கவனித்துக்கொண்டிருப்பதுபோல் ஜனங்கள் அனைவரும் ஒன்றுமே புரியாமல் விழித்துக்கொண்டிருந்தார்கள். திடீரெனத் தங்கள் முன் தோன்றிய மகத்தான விஷயத்தைப் புரிந்து கொள்ள முடியாமல், தங்களுக்குப் புரிந்த சின்னஞ்சிறு விஷயங்களைப்பற்றி மட்டும் ஏதேதோ உணர்ச்சிகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள்.

“இதைக் கேளு. அவர்கள் ஏன் இவர்களைப் பேசவிடுவதில்லை?” என்று புகினின் மூத்த சகோதரன் சிறிது உரக்கக் கேட்டான். “அரசாங்க வக்கீலை மட்டும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் பேசவிடுகிறார்களே.......”

பெஞ்சுகளுக்குப் பக்கத்தில் நின்ற ஓர் அதிகாரி ஜனக்கூட்டத்தை நோக்கித் தன் கையை நீட்டி அவர்களைக் கையமர்த்தினான்.

“அமைதி, அமைதி” என்றான் அவன்.

சமோய்லவின் தந்தை பின்னால் சாய்ந்துகொண்டு மனைவியின் முதுகிற்குப்பின் உடைந்த வார்த்தைகளில் ஏதேதோ முணுமுணுக்கத் தொடங்கினான்.

“ரொம்ப சரி—அவர்கள் குற்றவாளிகளென்றே வைத்துக் கொள்வோம். இருந்தாலும் தங்கள் கட்சியை எடுத்துரைப்பதற்கும் அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டாமா? அவர்கள் யாருக்கு