பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

506

மக்சீம் கார்க்கி


"அப்படியானால் நீங்கள் என்ன செய்வீர்கள்? குழந்தை இருந்தால் அந்தக் குழந்தையின் கதி?”

“அதெல்லாம் சமயம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம். அவன் என்னை ஒன்றும் பொருட்படுத்திக்கொண்டிருக்கக்கூடாது. அவனது போக்குக்கு இடையூறாக நான் என்றுமே இருக்கமாட்டேன். அவனைப் பிரிந்திருப்பது எனக்குச் சிரமம்தான். இருந்தாலும் நான் சமாளித்துக் கொள்வேன். அவன் வழியிலே நான் நிற்கவே மாட்டேன்.”

சாஷா சொன்னபடியே செய்வாள் என்பதைத் தாய் உணர்ந்துகொண்டாள்; அந்தப் பெண்ணுக்காக அனுதாபப்பட்டாள்.

“உங்களுக்கு ரொம்பச் சிரமமாயிருக்குமே. கண்ணு!” என்று அவளைத் தழுவிக்கொண்டே சொன்னாள் தாய்.

சாஷா மிருதுவாகச் சிரித்தாள்; தாயின் பக்கமாக நெருங்கிக் கொண்டாள்.

இந்தச் சமயத்தில் களைப்போடும் ஆயாசத்தோடும் நிகலாய் இவானவிச் உள்ளே வந்தான். தனது உடுப்புக்களை அவசரமாகக் கழற்றிக்கொண்டே அவன் பேசினான்.

“சாஷா! சந்தர்ப்பம் இருக்கிறபோதே நீங்கள் வெளியே தப்பிப் போய்விடுவது நல்லது. இன்று காலை முதல் இரண்டு உளவாளிகள் என்னைப் பின்தொடர்ந்தே திரிகிறார்கள். என்னைக் கைது செய்யத்தான் இப்படி, வருகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. நான் நினைத்தது என்றும் தவறியதில்லை. ஏதோ நடந்து போயிருக்கிறது. இதற்குள், இதோ பாவெலின் பேச்சு இருக்கிறது. இதை அச்சிட்டு வழங்குவதெனத் தீர்மானித்துவிட்டோம். இதை லுத்மீலாவிடம் கொண்டு போங்கள். இதை வெகு சீக்கிரம் அச்சடித்து முடிக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள். பாவெல் மிகவும் அருமையாகப் பேசினான். நீலவ்னா!..., போகிறபோது அந்த உளவாளிகளையும் ஒரு கண் பார்த்துக் கொள்ளுங்கள் சாஷா!...”

அவன் பேசிக்கொண்டே குளிர்ந்து விறைத்த தன் கரங்களைத் தேய்த்து விட்டுக்கொண்டான். மேஜையருகே சென்று டிராயரைத் திறந்து ஏதேதோ காகிதங்களை வெளியே எடுத்தான். சிலவற்றைக் கிழித்தெறிந்தான். சிலவற்றை ஒருபக்கமாக ஒதுக்கி வைத்தான். அவன் மிகவும் கவலைப்பட்டுக் களைத்து போனவனாகத் தோன்றினான்.

“நான் இந்த டிராயர்களைச் சுத்தம் செய்து அப்படியொன்றும் நாட்களாகிவிடவில்லை. இந்தப் புதிய தாள்களையெல்லாம் எப்படி இங்கு வந்தன என்பது சைத்தானுக்குத்தான் தெரியும், சரி, நீலவ்னா, நீங்கள்