பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

532

மக்சீம் கார்க்கி


எவ்வளவோ காலமாகத் தேடித் திரிந்த வார்த்தைகளாக ஒலித்தன. தாய்க்கு அருகில் நின்ற ஜனங்கள் மெளனமாக நின்றார்கள்: அவளையே விழுங்கிவிடுவதுபோல் இமை கொட்டாமல் பார்த்தார்கள். அவர்களது உஷ்ண மூச்சுக் காற்றுக்கூடத் தன் முகத்தில் உறைப்பதை அவள் உணர்ந்தாள்.

“ஏ கிழவி, போய்விடு!”

“அவர்கள் உன்னை ஒரு நிமிஷத்தில் பிடித்துவிடுவார்கள்.”

“இவளுக்குத்தான் என்ன தைரியம்:”

“போங்கள் இங்கிருந்து! கலைந்து போங்கள்!” என்று கத்திக்கொண்டே போலீஸ்காரர்கள் மேலும் நெருங்கி வந்தார்கள். தாய்க்கு எதிராக நின்ற ஜனங்கள் ஆடியசைந்து ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டார்கள்.


அவர்கள் தன்னை நம்பவும், தான் சொல்வதைப் புரிந்து கொள்ளவும் தயாராயிருப்பதாகத் தோன்றியது. எனவே அவன் அவசரமாக, தனக்குத் தெரிந்த சகல விஷயங்களையம், தனது அனுபவத்தால் கண்டறிந்த சகல எண்ணங்களையும் அவர்களுக்குச் சொல்லித் தீர்த்துவிட எண்ணினாள். அந்த எண்ணங்கள் அவளது இதயத்தின் அடித்தளத்திலிருந்து லாவகமாகப் பிறந்தெழுந்து, கவிதா சொரூபமாக இசைத்துக்கொண்டு வெளியேறின; ஆனால் அந்தக் கவிதையை தன்னால் பாடிக்காட்ட முடியவில்லையே என்று அவள் வேதனைப்பட்டாள். அவளது குரல் நடுநடுங்கி உடைந்து கரகரத்து ஒலித்தது.

“தனது ஆன்மாவை விற்றுவிடாத ஒரு தொழிலாளியின் நேர்மை நிறைந்த பேச்சுத்தான் என் மகனின் பேச்சு. நேர்மையான வாசகம்! அந்த வாசகத்தின் தைரியத்தைக்கொண்டே நீங்கள் அதை அறிந்து கொள்வீர்கள்!”

ஒரு இளைஞனது இரண்டு கண்களும் அவளைப் பயத்தோடும் வியப்போடும் பார்த்துக்கொண்டேயிருந்தன.


யாரோ அவளது மார்பில் தாக்கினார்கள். அவள் பெஞ்சின் மீது விழுந்தாள். ஜனக்கூட்டத்துக்கு மேலாக போலீஸ்காரர்களின் கைகள் தெரிந்தன. ஜனங்களைத் தோளைப் பிடித்தும் கழுத்தைப் பிடித்தும் தள்ளிக்கொண்டும் தொப்பிகளைப் பிடுங்கியெறிந்துகொண்டும் அவர்கள் முன்னேறி வந்தார்கள். தாயின் கண்களில் எல்லாமே இருண்டு மங்கித் தோன்றின. அவள் தனது ஆயாசத்தை உள்ளடக்கி வென்றுகொண்டே, தனது தொண்டையில் மிஞ்சி நின்ற சக்தியோடு உரத்துக் கத்த முனைந்தாள்.

“ஜனங்களே! ஒன்று திரளுங்கள் ஓரணியில் பலத்த மாபெருஞ் சக்தியாகத் திரண்டு நில்லுங்கள்!”