பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

71


பளபளப்பான பூட்டு மாட்டியிருந்த சிறு பெட்டியில் தனது தஸ்தாவேஜுகளை அதிகாரி அவசரமாக வைத்தான்.

“புறப்படுங்கள்!” என்று உத்தரவிட்டான்.

தன்னோடு அவர்கள் கைகுலுக்கிக்கொண்டபோது, அன்பும் அமைதியும் நிறைந்த குரலில் விடை கொடுத்தான் பாவெல்: “போய்வா அந்திரேய், போய்வா நிகலாய்!”

“ஆமாமாம், போய்விட்டு வந்தாலும் வருவார்” என்று அந்த அதிகாரி எகத்தாளமாய்ச் சொன்னான்.

நிகலாய் நெடுமூச்சு விட்டான். அவனது தடித்த கழுத்தில் ரத்தம் பாய்ந்து புடைத்தது. அவனது கண்களில் கோபம் முட்டி மோதிப் பொங்கிக்கொண்டிருந்தது. ஹஹோல் பளிச்சென்று சிறு புன்னகை செய்து தலையை ஆட்டினான்; தாயிடம் மட்டும் இரகசியமாக ஏதோ சொன்னான். அவளோ சிலுவைக் குறியிட்டபடி சொன்னாள்:

“கடவுள் யார் நல்லவர் என்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.........”.

கடைசியாக, அந்தக் காக்கிச் சட்டை ஆசாமிகள் வாசல்புறத்தை நோக்கிச் சென்றார்கள். காலில் அணிந்த பூட்ஸின் தார் ஆணிகளின் சப்தம் கலகலத்து தறைய அவர்களும் கண் மறைந்து போய்விட்டார்கள். ரீபின்தான் கடைசியாகப் போனான். அவன் போகும்போது பாவெலைக் கவனமாய்ப் பார்த்துவிட்டுப் போனான்.

“சரி. நான்..... வ... ரட்... டுமா?” என்று ஏதோ சிந்தித்தவாறே சொல்லிவிட்டு, தாடியுள் இருமிக்கொண்டே வெளியே போனான்.

பாவெல் தனது கைகளைப் பின்னால் கோர்த்துக்கொண்டு சிதறிக்கிடந்த புத்தகங்களையும், துணிமணிகளையும் தாண்டித் தாண்டி மெதுவாக உலவினான்.

“பார்த்தாயா? அவர்கள் இப்படித்தான் செய்வார்கள்” என்று சோர்ந்துபோன குரலில் சொன்னான் அவன்.

அவனது தாய் குழம்பிக்கிடந்த வீட்டின் சூழ்நிலையைப் பரிதாபகரமாகப் பார்த்தாள்.

“நிகலாய் ஏன் இவ்வளவு முரட்டுத்தனமாய் நடந்துகொண்டான்?” என்று வருத்தத்தோடு கேட்டாள்.

“ஒருவேளை அவன் உள்ளுக்குள் பயந்துபோயிருக்கலாம்” என்றான் பாவெல்.