பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

மக்சீம் கார்க்கி


"அவர்கள் பாட்டுக்கு வந்தார்கள். இவர்களைப் பிடித்தார்கள். கொண்டுபோய்விட்டார்கள். இப்படித்தான்.......” என்று கைகளை ஆட்டிக்கொண்டே சொன்னாள்.

அவளது மகன் கைது செய்யப்படவில்லை ; எனவே அவளது இதயம் அமைதி நிறைந்து அடித்துக்கொண்டது. ஆனால், தன் கண்முன்னால் நடந்து போன மறக்க முடியாத அந்தக் காட்சியை நினைத்து நினைத்து அவளது சிந்தனை செயலற்று ஸ்தம்பித்துத் தவித்துக்கொண்டிருந்தது.

“அந்த மஞ்சள் மூஞ்சிக்காரன் மூமூ அவன் நம்மைக் கேலி செய்தான்! பயமுறுத்தினான்!.....”

“சரி, அம்மா, என்று திடீரென்று தீர்மானமாகச் சொன்னான் பாவெல். நீ வா..... இதையெல்லாம் ஒழுங்குபடுத்தலாம்.”

“அம்மா” என்றும் ‘நீ’ என்றும் தாயை அழைத்தான். அவளுக்கு வெகு நெருக்கமாய் இருக்கும்பொழுது தான் தாயை அவன் அவ்வாறு அழைப்பது வழக்கம். அவள் அருகே சென்று அவன் முகத்தைப் பார்த்தாள்.

“அவர்கள் உன்னை இழிவுபடுத்திவிட்டார்களா?” என்று அமைதியுடன் கேட்டாள்.

“ஆமாம், அதுதான் சங்கடமாயிருக்கிறது. அவர்கள் என்னையும் கொண்டு சென்றிருந்தால் நல்லது!”

அவனது கண்களில் கண்ணீர் ததும்பியிருப்பதாக அவளுக்குப் புலப்பட்டது; அவனது இதய வேதனையை ஆற்றுவதற்கு முயல்வதுபோல, அவள் பெருமூச்சுவிட்டுக்கொண்டு சொன்னாள்;

“பொறு பொறு. அவர்கள் உன்னையும்கூடக் கொண்டு போய்விடுவார்கள்?”

“நிச்சயம் கொண்டு போவார்கள்!”

அவள் ஒரு கணம் மௌனமானாள்.

“பாஷா, நீ எவ்வளவு உறுதி வாய்ந்தவன்!” என்று சொன்னாள் அவள். “நீ ஒரு வேளையாவது உன் தாயைத் தேற்றியிருக்கிறாயா? நான் ஏதோ பயங்கரத்தைச் சொன்னால், நீ அதைவிடப் பயங்கரத்தைச் சொல்லி, என்னையே பயப்பட வைக்கிறாயே!” என்று பரிதவித்தாள்.

அவளை ஏறிட்டுப் பார்த்தவாறே தாயை நெருங்கினான் அவன்.

“எனக்கு அதெல்லாம் தெரியாது. அம்மா. நீதான் இதற்கெல்லாம் உன்னைப் பழக்கிக் கொள்ளவேண்டும்.”