உயர்விலே ஆசை
9
சமயத்தில் அடிமனத்தில் அழுந்திக் கிடக்கும் தகாத இச்சைகள் கனவாக வெளிவந்து ஓரளவுக்குத் திருப்திப் பெற முயல்கின்றன. ஆனால் கனவில் வரும்போது நனவு நிலையில் வருவதுபோலவே இவை நேரடியாகத் தம் சுய ரூபத்தோடு வருவதில்லை. அப்படி வந்தால் மனச்சாட்சி என்ற காவற்காரன் விழித்துக்கொள்வானோ என்ற பயம் இவைகளுக்கு உண்டு போலிருக்கிறது. அதனால் அவை மாறு வேடம் பூண்டு குறியீடுகளைப் போலவும் நாடக வேஷக்காரர்களைப் போலவும் தோன்றுகின்றன. அந்தக் குறியீடுகளின் பொருளையும் நாடக வேஷங்களின் பொருளையும் கண்டறிய முடியுமானால் அந்தத் தகாத இச்சைகள் எவை என்று கண்டுகொள்ளலாம். ஆதலால் கனவைப் பகுத்துப் பார்த்து ஆராய்ச்சி செய்வதில் பிராய்டு கவனம் செலுத்தினார். இவர் வகுத்த இந்த முறைக்குக் கனவுப் பாகுபாட்டு முறை என்று பெயர்.
கனவை ஆராய்வதோடு மட்டும் அவர் நின்றுவிடவில்லை. அடிமனத்தில் அழுந்திக் கிடக்கும் இச்சைகளை வெளிப்படுத்துவதற்கு அவர் 'தடையிலாத் தொடர் முறை என்று மற்றொரு முக்கியமான முறையையும் வகுத்தார். மன நோயால் துன்புறுகிறவர்களை ஏகாந்தமாக ஒரு தனியறையில் படுக்கச் செய்து சில குறிப்பான வார்த்தைகளைச் சொல்லுவதன் மூலம் அவருடைய உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை யெல்லாம் ஒளிவு மறைவின்றி வெளியிடும்படி செய்வதே இந்த முறையின் வழியாகும். உடம்பையும் சிந்தனையையும் கட்டுப்பாடு செய்யாமல் தளர்வாக விட்டிருக்கும் நிலையில் அவர் மனத்திலிருந்து வெளியாகும் வார்த்தைகளைக் கொண்டு அடிமனக் கேளாறுகளைக் கண்டு பிடிக்கலாம் என்பது பிராய்டின்