பக்கம்:திரவிடத்தாய்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஒவ்வொரு நாட்டாரும் பெரும்பாலும் வெவ்வேறு மொழியைப் பேசிவருகின்றனர். ஒரு நாட்டார் மற்றொரு நாட்டாரின் மொழியைக் கற்றாலொழியப் பேச முடியாது. ஒரு திரவிடத்தாய் நாட்டாருள்ளும் குழந்தைகள் பெரியோர் வாயிலாய்க் கேட்டாலொழியத் தம் தாய் மொழியைப் பேசமுடியாது. குழவிப் பருவத்திலேயே தம் நாட்டாரினின்று பிரிக்கப்பட்டு மொழி வழங்காத அல்லது தாய்மொழி வழங்காத இடத்தில் நிலையாய் வாழ்ந்தவர்கள் தாய்மொழியைப் பேச முடியாது. முழுச் செவிடர் பிறர் பேசுவதைக் கேட்க இயலாமையாலேயே பெரும் பாலும் ஊமையராகின்றனர். விலங்குகளையும் பறவைகளையும் போன்று, மிகச் சில ஒலிகளால் மிகச் சில கருத்துகளைத் தெரிவித்துக் கொண்ட தமக்கென மொழியில்லாத அநாகரிக மக்களும் சில காடுகளில் வாழ்கின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் நாகரிக வளர்ச்சிக்கேற்ப மொழியும் வளர்ந்துள்ளது.

ஒருவனுக்குப் பிறப்பிலேயே தாய்மொழி யறிவில்லை; அதைப் பேசுந்திறன் அல்லது கற்குந்திறன் மட்டுமுண்டு. ஓராண்டுக் குழந்தை 'அம்மா', 'அப்பா', 'பாச்சி' (பால்), 'சோச்சி' (சோறு) முதலிய பெயர்களையும், ஒன்றரையாண்டுக் குழந்தை அவற்றொடு 'வா', 'போ' முதலிய வினைகளையும், ஈராண்டுக் குழந்தை தன் கருத்திற்குரிய சொற்களெல்லாவற்றையும் சொல்லக் கற்றுக்கொள்கிறது. அல்லது கற்பிக்கப்படுகிறது. மூவாண்டுக் குழந்தை நன்றாய்ப் பேசுகிறது; பின்பு வீட்டைவிட்டு வெளியேறிப் பொருள்களையும் செய்திகளையும் அறியஅறியச் சொற்றொகுதியும் பெருகி வருகிறது; அதன்பின் கல்வியினால் பல சொற்கள் புதிதாய் அறியப்படுகின்றன. இங்ஙனம் ஒருவன் வளர வளர, அறிவு பெருகப் பெருக, தன் சொற்றொகுதியை மிகுத்துக் கொண்டே போகின்றான். ஒரு குழந்தை தன் பெற்றோ ரிடத்தினின்று பேசக் கற்றுக்கொண்டாற் போல, ஒரு நாட்டார் தம் முன்னோரிடத்தினின்று பேசக் கற்றுக்கொள்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/10&oldid=1430590" இலிருந்து மீள்விக்கப்பட்டது