பக்கம்:திரவிடத்தாய்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மேற்கூறிய காரணங்களால், மாந்தன் ஒரு காலத்தில் மொழியில்லாதிருந்தான் என்பதும், மொழியமைந்த பின் வழிவழிப் பின்னோரெல்லாம் முன்னோரிடத்தினின்று மொழியைக் கற்று வருகின்றனர் என்பதும் உய்த்துணரப்படும்.

உலகிலுள்ள மக்களெல்லாம் ஓரிடத்தினின்றே பரவிப் போயினர் என்பதும், ஒரு தாய்வயிற்றினரே என்பதும் ஆராய்ச்சியாற் கண்ட முடிபுகளாம். மாந்தன் முதலாவது தோன்றிய இடத்தில் மக்கள் மொழியில்லாமலே சிலகாலம் வாழ்ந்து வந்தனர். மொழியில்லாத நிலையில் சில முறையும் மொழி தோன்றியபின் சிலமுறையுமாக மக்கள் பலதிசைக்கும் பல முறை பரவிப் போயிருக்கின்றனர். மொழியில்லாது பிரிந்துபோனவர் தாம் போன இடங்களில் புதிதாய்த் தத்தமக்கு ஏற்றவாறும் இயன்றவாறும் இயன்மொழிகளை ஆக்கிக்கொண்டனர். மொழி தோன்றியபின் பிரிந்து போனவர் தத்தம் சுற்றுச் சார்பிற்கேற்பப் புதுச் சொற்களை அமைத்தும் தட்பவெப்ப நிலைக்கேற்பப் பழஞ் சொற்களைத் திரித்துங் கொண்டனர். ஆயினும், தொடர்புடைய மக்களெல்லாம் தொடர்புடைய மொழிகளைப் பேசி வருவதும், மக்கள் தொடர்பின் பெருமை சிறுமைக்கேற்ப அவர்கள் மொழிகளின் தொடர்பும் மிக்கும் குறைந்து மிருப்பதும் இயல்பாம். இதற்கு, அமெரிக்க நீகிரோவைப் போல அநாகரிக மொழியராயும் கோவாப் போர்த்துக்கீசியரைப் போலச் சிறுபான்மையராயுமிருந்து, அயன்மொழிகளைக் கடைப்பிடிப்பது விலக்காம். வேறு சில விலக்குகளு முள; அவை வேண்டுமிடத்துக் கூறப்படும்.

2. தமிழ்மொழி எது?

பனிமலை தோன்றாத முதற்காலத்தில் நாவலந்தேய முழுதும், தொல்காப்பியர் காலத்தில் வேங்கடத்திற்கும் (தெற்கே யமிழ்ந்துபோன) குமரிமலைக்கும் இடையிலும் வழங்கிவந்து, தற்போது வேங்கடத்திற்கும் குமரிமுனைக்கும் இடையில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் மைசூர்ச் சீமைக்கும் கிழக்கில் வழங்கிவருவது தமிழ்மொழியாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/11&oldid=1430591" இலிருந்து மீள்விக்கப்பட்டது