பக்கம்:திரவிடத்தாய்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

1. மொழி என்றால் என்ன?

ஒரு வகுப்பார் அல்லது நாட்டார் தம் கருத்தைப் பிறர்க்குப் புலப்படுத்தற்குக் கருவியாகக் கொள்ளும் ஒலித்தொகுதியே மொழியாம். அவ் வொலி சொல்லுஞ் சொற்றொடருமாயிருக்கும். சொல்லும் ஓரெழுத்துச் சொல் ஈரெழுத்தச் சொல் முதலியவாகப் பலவகைத்து,

ஓர் ஒலி வேறு; அதனால் உணர்த்தப்படும் பொருள் வேறு. ஒலிக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு வரிவடி வெழுத்திற்கும் ஒலிவடி வெழுத்திற்கும் உள்ளதே. காற்று இயங்குவதினாலும் இரு அல்லது பல பொருள்கள் ஒன்றோடொன்று உராய்வதனாலும் ஓசை பிறக்கும். அவ் வோசைக்கு இயல்பாய்ப் பொருளில்லை. அவ் வோசையைப் பொருளுணர்த்தும் அடையாளமாகக் கொண்டதே மொழியாம். காற்றியக்கம் வெள்ளிடையியங்குவதும் உயிரி (பிராணி)களின் வாய்வழி இயங்குவதும் என இருவகைத்து. இவற்றுள், பின்னதன் பயனாய ஒலிகளே பெரும்பாலும் மொழிக் கருவியாம். ஒலிக்கு இயல்பாய்ப் பொருளுணர்த்தும் தன்மை யிருப்பின், உலகமெங்கும் என்றும் ஒரு மொழியாயும் அதுவும் கல்லாமலே அறியப்படுவதாயு மிருக்கும். அங்ஙனம் இன்மையறிக.

மொழிநூலின் திறமறியாத சிலர், ஓசை நிலைப்பானது ஆகவே ஓசைவடிவான மொழிகளும் நிலைப்பானவை என்று கூறுவர். இது, இரும்பு நிலைப்பானது; ஆகவே, இரும்பு வடிவான இயந்திரங்களும் நிலைப்பானவை; புதிதாயுண்டாயவையல்ல என்று கூறுவது போன்றதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/9&oldid=1430589" இலிருந்து மீள்விக்கப்பட்டது