பக்கம்:திரவிடத்தாய்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ளம் எனத் திரிந்தது இயல்பே. பின்பு அது நாளடைவில் த்ரமிடம் த்ரவிடம், எனத் திரிந்தது. ள - ட, ம - வ, போலி. த்ரவிடம் என்பது மெய்ம் முதலாதலின் தமிழில் திரவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது.

கால்டுவெல் கண்காணியார் குமரிநாட்டுச் சரித்திரத்தையும் தொல்காப்பியத்தையும் மேற்கணக்கு நூல்களையும் அறியாத வராதலின், தமிழரை வடக்கிருந்து வந்தவராகவும் ஆரியரால் நாகரிகமடைந்தவராகவும் கொண்டு த்ரமிளம் என்னும் வடசொல்லினின்று தமிழ் என்னுஞ் சொல் பிறந்ததென்று கூறினார். ஆனால், பண்டிதர் கிரையர்சன் இதை மறுத்துத் தமிழம் என்பதே த்ரவிடம் என்பதன் மூலம் எனத் தமது இந்திய மொழியாராய்ச்சி (Linguistic Survey of India) என்னும் நூலில் நாட்டியுள்ளார். ஆண்டுக் காண்க.

தமிழுக்குத் திரவிடம் என்னும் பெயர் தமிழ்நாட்டில் வழங்காமையானும், தமிழ் என்னும் வடிவத்தை யொட்டிய பெயர்களே மேனாட்டிலும் வடநாட்டிலும் பழங்காலத்தில் வழங்கி வந்தமையாலும், திரவிட மொழிகளெல்லாம் ஒரு காலத்தில் தமிழாகவே யிருந்தமையானும், தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தது என்று தெளியப்படும்.

6. தமிழே பிற திரவிட மொழிகளாகத் திரிந்தமை

தமிழ் என்னும் பெயர் எங்ஙனம் திரவிடம் என்று திரிந்ததோ, அங்ஙனமே தமிழாகிய மொழியும் பிற திரவிட மொழிகளாய்த் திரிந்ததென்க.

தலைக்கழகக் காலத்தில், தமிழ், செந்தமிழ் கொடுந்தமிழ் என இரண்டாக வகுக்கப்பட்டது. இவை வழங்கும் நாடுகளும் செந்தமிழ் நாடு கொடுந்தமிழ் நாடு எனப்பட்டன. செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரு நாடுகள் கொடுந்தமிழ் நாடுகளாயிருந்தன.

இலக்கணம் நிரம்பிய சிறந்த வழக்கான தமிழ் செந்தமிழ், அது திரிந்தது கொடுந்தமிழ். செம்மை நேர்மை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/17&oldid=1430597" இலிருந்து மீள்விக்கப்பட்டது