பக்கம்:திரவிடத்தாய்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தெலுங்கு தமிழ்நாட்டிற்கு வடக்கில் வழங்குவதால் வடுகு எனப்பட்டது. தெலுங்கு என்பதன் பண்டை வடிவம் திரிலிங்கம் என்பது. இது முதலாவது தெலுங்குநாட்டுப் பெயராயிருந்து பின்பு அந் நாட்டு மொழியைக் குறித்தது. ஆந்திரம் என்பதும் இங்ஙனமே. தாலமி என்னும் ஞால நூலாசிரியர் 'த்ரிக்ளுப்தொன்' 'த்ரிக்ளுப்தொன்', 'Triglupton' `Triglupton' என ஒரு கங்கைக்கரை நாட்டையும், பிளினி என்னும் சரித்திராசிரியர் 'மெர்டொகலி கம்' (மூன்று கலிங்கம்) என ஓர் இந்திய நாட்டையும் குறித் திருப்பதனாலும், ஒரு பண்டை இந்திய அரச மரபினர் 'திரிக லிங்கத் தலைவர்' என்னும் பட்டத்தைச் சூடிக் கொண்டதாக ஒரு கல்வெட்டுக் கூறுவதாலும், புராணங்களிலும் ஒரு செப்புப் பட்டயத்திலும் 'திரிகலிங்கம்' என்னும் பெயர் காணப்படுவதாலும், பிளினி என்பவர் கலிங்கத்தினும்(Calingae) வேறாக மக்கோ-கலிங்கே (Macco-Calingae), கங்கரிதெசு - கலிங்கே(Gangaridas - Calingae) என இரு நாடுகளைக் குறிப்பதாலும், பாரதத்துள் கலிங்கர் மும்முறை குறிக்கப்படுவதாலும், கலிங்கம் (ஒரிசா மாகாணமும் கஞ்சங் கோட்டகமும்) என ஒரு தெலுங்கு நாடிருந்ததாலும், பண்டைத் தெலுங்கு நாட்டின் ஒரு பாகம் கலிங்கம் என்னும் பொதுப்பெயர் கொண்ட முப்பகுதியா யிருந்ததென்றும், அதனால் திரிகலிங்கம் எனப்பட்ட தென்றும் அறியலாம். திரிகலிங்கம் என்பது, முறையே திரிலிங்கம் - தெலுங்கம் - தெலுங்கு என மருவிற்று. தாரநாதன் என்னும் திபேத்தச் சரித்திராசிரியர் தெலுங்கு நாட்டைத் திரிலிங்கம் என்றும், அதன் ஒரு பகுதியைக் கலிங்கம் என்றும், அதன் தலைநகர் கலிங்கபுரம் என்றும் குறித்துள்ளார். தெலுங்கு என்னும் பெயர் தெலிங்க, தைலிங்க, தெலுகு, தெனுங்கு தெனுகு என்னும் வடிவங்களிலும் தெலுங்கர்க்குள் வழங்கிவருகின்றது. இவற்றுள் தெனுகு என்னும் வடிவத்தைச் சிறந்ததாகக்கொண்டு அதற்குத் 'தேன் போன்றது' என்னும் பொருள் கற்பிப்பது தெலுங்குப் பண்டிதர் வழக்கம்!*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/89&oldid=1430750" இலிருந்து மீள்விக்கப்பட்டது