உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணா

அந்த இரு பிரிவினரையும் பாட்டுப் பாடத் தெரிந்த 'தேசீயம்’ என்று சொல்லலாம்.

இன்னொருவர் வந்து 'இந்தக் கூட்டத்திலுள்ள உயரமானவர்களெல்லாம் ஒரு பக்கமும், குட்டையானவர்கள் மற்றொரு பக்கமும் வாருங்கள்' என்று சொன்னால், பாடத் தெரிந்த பிரிவினரும், பாடத் தெரியாத பிரிவினரும் கலைவார்கள். பாடத் தெரிந்தவர்களில் இருந்த உயரமானவர்களும், பாடத் தெரியாதவர் பிரிவிலிருந்த உயரமானவர்களும் ஒன்று சேர்வார்கள்; அப்போதும் முஸ்லிம், கிறிஸ்தவர், இந்து என்ற வித்தியாசம் இருக்காது; உயரத்தின் அளவிலேதான் பிரிக்கப்படுவார்கள்.

இன்னொருவர் வந்து, கையிலே காசு உள்ளவர்கள் ஒரு பக்கமும், இல்லாதவர் மற்றொரு பக்கமும் வாருங்கள் என்றால் காசு இருப்பவர்கள் தான் முந்திக்கொண்டு காசு இல்லாதவர்கள் பக்கம் செல்வர். ஏனென்றால், தங்கள் காசுக்கு எங்கே ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சுவர். அதனால் அப்பொழுது இரண்டு பிரிவு ஏற்படாது; எல்லாரும் ஒரே அணியில் இருப்பார்கள்.

உலகில் சேர்ந்து வாழும் மக்கள், இப்படி ஒவ்வொரு முறையில் பரம்பரை பரம்பரையாக — தலைமுறை தலைமுறையாக — பல நூற்றாண்டுகளாக, ஒரேவகை எண்ணம், ஒரேவகை பண்புகளால் வாழ்ந்த மக்கள், ஒரே தேசீய இயக்கமாகக் கருதப்பட்டார்கள்.

வாட்டும் வடக்கும் தேம்பும் தெற்கும்

ஆங்கிலேயன் இந்தியாவுக்கு வந்த பின், ஆங்கிலேயன் ஆள்பவனாகவும் இந்தியர்கள் ஆளப்படுபவர்களாகவும் பிரிக்கப்பட்டனர்.

ஆளுபவர் ஒருபக்கமும், ஆளப்படுபவர்கள் மற்றொரு பக்கமும் இருந்தனர். இந்து — முஸ்லிம் — பவுத்தர் என்பதைவிட, ஆங்கிலேயர் — இந்தியர் என்ற பிரிவினை முக்கியத்துவம் பெற்றது.

உயரமாக இருப்பவர்களை அழைத்ததும், பாடத் தெரிந்த அணியிலிருந்த உயரமானவர்கள் பிரிந்து இன்னொரு பக்கம்

9