திராவிட தேசீயம்!
'தேசீயம்' என்று காங்கிரஸ்காரர்கள் சொல்கிறார்கள். 'திராவிடத் தேசீயம்' என்கிறோம் நாம். 'இல்லை, இல்லை' 'தமிழ்த் தேசீயம்' தான் இருக்கிறது என்கிறார்கள் ஒருசாரர்.
'இந்தியத் தேசீயம்' என்று வடநாட்டில் இருப்பவர்களும், இந்தியாவுக்கு வெளியே இருப்பவர்கள் 'ஆசிய தேசீயம்' என்றும், ஆசியாவுக்கு வெளியே இருப்பவர்கள் 'தேசியம் என்பதே இல்லை! எல்லாம் சர்வ தேசீயம்தான் என்றும் சொல்கிறார்கள்.
இன்னும் வானவெளிக்குச் சென்று வந்தால், அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒரே தேசீயம் என்பார்கள்.
இப்படி எது 'தேசியம்' என்று இன்னமும் வரையறுத்துச் சொல்ல முடியவில்லை.
இதற்குச் சிறிய உதாரணம் கூறி உங்களுக்கு விளக்க விரும்புகிறேன் உங்களிடத்திலே பெரிய பெரிய புத்தகங்களைப் படித்துக் காட்டி விளக்கங் கூறத் தேவையில்லை எனக் கருதுகிறேன். நான் அப்படிப்பட்ட புத்தகங்களைப் பார்க்காததால் அல்ல; அந்த அளவுக்கு நாடு பக்குவப்படாததால் நான் சிறிய எளிய உதாரணங்களைச் சொல்லுவது வாடிக்கை
இந்தக் கூட்டத்தில் உங்களைப் பார்த்து 'பாட்டுப் பாடத் தெரிந்தவர்களெல்லாம் ஒரு பக்கம் வாருங்கள்; பாடத் தெரியாதவர்களெல்லாம் மற்றொரு பக்கம் இருங்கள்' என்று நான் கேட்டுச் கொண்டு, அதன்படி நீங்கள் வந்தால், பாட்டுப்பாடத் தெரிந்தவர்களில் சிலர் உயரமாக இருக்கலாம்; சிலர் குட்டையாக இருக்கலாம்; பலர் கருப்பாக இருக்கலாம் — சிலர் சிவப்பாக இருக்கலாம்; அவர்களில் இந்துக்களும் இருக்கலாம் — முஸ்லிம்களும் இருக்கக்கூடும்; கிறிஸ்தவரும் இருப்பார் — சைவரும் இருப்பார்; வைணவரும் இருப்பார். பொதுவாக 'பாட்டுப் பாடத் தெரியாதவர் — தெரிந்தவர்' என்ற அடிப்படையில்தான் இங்கே பிரிக்கப்படும்.
8