உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணா

கேட்டுக்கொள்கிறேன்; உண்மையைத்தான் சொல்கிறேன் — அதற்கும் பழக்கடை என்று தான் பெயர்.

அதைப்போல ஒரு சிலர் திராவிட நாட்டை ஒத்துக் கொள்ளாவிட்டாலும், இது திராவிட நாடுதான்.

முயற்சி தேவை — திராவிட நாடு கிட்ட!

வடக்கால் நாம் கஷ்டப்படவில்லை என்றால், அப்படிச் சொல்பவர்கள் வடக்குப் பக்கமே இருக்கட்டும். நாங்கள் அவர்களைத் தடுக்கவில்லை. ஆனால், வடநாட்டால் நாம் சீரழிக்கப்படுகிறோம் என்ற நம்பிக்கை இருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் திராவிடர் என்கிறோம்; அதனால், இந்நாட்டைத் திராவிடம் என்கிறோம். இப்படிச் சொல்லிச் சொல்லி உள்ளத்தில் பதிந்துவிட்டால் இது ஒரு தேசியமாகிறது.

ஒரு கிண்ணத்தில் சந்தனம் இருக்கிறது; அதை எடுப்பதற்குக் கையும் இருக்கிறது; பூசிக்கொள்ள மார்பும் இருக்கிறது. அதை எடுத்துப் பூசிக்கொண்டால் தான் மணக்கும். கிண்ணத்தின் அருகில் அமர்ந்து கொண்டு வா வா என்றால் சந்தனம் தானே வந்தா மார்பில் ஏறும்? எடுத்துப் பூசிக் கொள்ளாமல், 'சந்தனம் வரவில்லையே எதைப் பூசிக் கொள்வது?' என்றால் அதற்கு நான் என்ன செய்ய?

அதைப்போல முயற்சி செய்யாமல் எப்படித் திராவிட நாடு கிட்டும்?

காமராசர் இப்போது கேட்கக்கூடும் — 'படித்தவர்களே திராவிட நாடு வேண்டாம் என்கிறார்களே' என்று! இதற்கும் என்னால் பதில் சொல்லமுடியும். படித்தவர்கள் வேண்டாம் என்று சொல்லும்போதே, நாங்கள் திராவிடநாடு கேட்கிறோம் என்றால் படிக்காதவர் சொல்வதை எப்படி நம்புவது?

இதில் படித்தவரா — படிக்காதவரா என்பதல்ல பிரச்சினை; உண்மையை உணர்ந்தவரா இல்லையா என்பதே பிரச்சினையாகும்.

11