பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௳

சிவமயம்.


திருக்குறட் குமரேச வெண்பா.

காப்பு


போதந் தருசெய்ய பொய்யா மொழிபுணர்த்தி
ஒதுகின்ற இந்நூற் குறுதுணையாச்-சோதிமிகு
மாதங்கங் கொண்டே மகிழ்பரமன் தந்தவொரு
மாதங்கங் கொண்டேன் மனம். (க)


இதன் பொருள்.


மெய்யுணர்வைத் தருகின்ற செவ்விய திருக்குறளை இணைத்துச் சொல்லுகின்ற இந்நூலுக்கு நல்ல துணையாக, ஒளிமிக்க உமா தேவியை ஒரு பாகத்தில் வைத்து மகிழ்கின்ற பரமபதி தந்த ஒரு மாதங்கத்தை யான் மனத்துட் கொண்டேன் என்பதாம்.

மனத்துள் கோடல்=நினைத்துத் துதித்தல்.

உரிய துதி அரிய விதியாய் மருவி வந்தது.

பொய்யாமொழி என்றது திருக்குறளை.

மெய்யான நூல் ஆதலால் இஃது இப்பெயர் பெற்றது.

தாம் உணர்த்திய நெறியில் வழுவாது ஒழுகுவார்க்குப் பொருந்திய பயனைப் பொய்படாதபடி விளைவிக்கும் திருந்திய மெய்மொழிகளால் தேவர் இந்நூலைச் செய்துள்ளமை தேற்றம். செய்ய பொய்யாமொழி = செம்மையும், மெய்மையும் சேர்ந்த மொழி. செம்மை-செவ்விய தன்மை. அஃதாவது முழுமுதற் பரமன் அருள் நெறியோடு யாதும் மாறுபடாத நேர்மை என்க. மெய்மை-உயிர்கட்கு என்றும் உறுதிபயக்கும் உண்மை.

ஏதங்கள் நீங்கி மனிதன் புனிதமாய் இனிது வாழப் போதங்கள் பொங்கியுள்ளமையால் பொய்யாமொழி போத ஒளியாய்ப் பொலிந்துள்ளது. போதம்= அறிவு, ஞானம். உலக நிலைகளை அறிந்து பர வழிகளை உணர்ந்து உயிர்கள் உய்திபெற அது உதவி புரிந்து வருகிறது. உத்தமமான உயர்ந்த புத்தி உரிமையோடு போதித்துள்ள போதனைகளைச் சாதனை செய்து

2