பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

திருக்குறட் குமரேச வெண்பா


சாதித்து வருபவர் வேதனைகள் விலகி விழுமியோராய் விளங்கி வருகின்றார். புனித நெறி புண்ணிய நிலைகளை அருளுகின்றது.

மனிதன் அரிய பல மகிமைகளை யுடையவன்; எதையும் அடைய வுரியவன்; மனம் மொழி மெய்கள் புனிதமாய் ஒழுகிவரின் அதிசய நலங்கள் அவனிடம் மருவி வருகின்றன.

உள்ளத்தால் பொய்யாது ஒழுகு; மனம் மாசின்றி இருந்தால் நீ புண்ணியவானாய் உயர்ந்து எண்ணிய யாவும் பெறுவாய்; உள்ளத்தின் அளவே உயர்வுகள் உளவாம்; சோம்பி இராதே; மடி குடியைக் கெடுத்து விடும்; ஊக்கி முயல்; ஆக்கங்கள் எல்லாம் உன்னை நோக்கி வரும்; காலம் கருதிக் கருமம் செய்யின் ஞாலமும் உன் வசமாம்; தரும நீதியே இருமையும் இன்பம் தரும்; அருளைப் பேணி நட; அல்லல் யாதும் உன்னை அணுகாது; நல்ல நீர்மையால் எல்லாச் சீர்மைகளும் சேரும்; பிறர் மனைவியரை விழையாதே; பிறர் பொருளை விரும்பாதே; எதையும் யாரிடமும் வாங்காதே; இயன்றவரை இதம் செய்; எவ்வழியும் செவ்வியனாய் இனிய மொழிகளையே பேசுக; பயன் இல்லாத வார்த்தைகளை யாண்டும் பேசாதே; நல்ல பழக்கங்களைப் பழகி உள்ளம் தூயனாய் ஒழுகின் உயர்ந்த மகிமைகளை அடைந்து நீ சிறந்து திகழ்வாய் என இன்னவாறு இனிய பல உறுதிநலங்களை இந்நூல் உரிமையோடு தெளிவாய் அருளியுள்ளது.

மாதங்கம்= யானை. அது தனது முகத்தையுடைய விநாயக மூர்த்தியை ஈண்டு விளக்கி நின்றது. ஒரு என்றது தனிமை புதுமை கருதி. மாதை அங்கத்தில் வைத்து மகிழ்பரமன் தந்த ஒரு மாதங்கத்தை எனது மனத்தில் வைத்து யான் இந்நூலைச் செய்கின்றேன் என்பதாம். அம்மையும் அப்பனும் அருமை மகனும் கருத வந்தமையால் இந்தத் தருமநூல் இருமை இன்பமும் தரும் என்பது பெற்றாம். பெரிய தங்கம் உடையேன்; அரியன யாவும் அடைவேன் என உறுதி பூண்டுள்ளமை தெரிய வந்தது.

இஃது இந்நூல் மங்கலமா முடியும்பொருட்டு ஐங்கரக்கடவுளை வாழ்த்தியதாம். தெய்வ சிந்தனை திவ்விய நிலையை அருளுகிறது. இன்ப மயமான இறைவனை எண்ணுங்தோறும் மனிதனிடம் அன்பு சுரந்து வருகிறது; அதனால் அளவிடலரிய நன்மைகள் உளவாகின்றன. அந்த ஆக்கம் அதிசய பாக்கியமாம்.