பக்கம்:திருக்குறளில் செயல்திறன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

திருக்குறளில் செயல்திறன்

கொண்டு யானைக் காட்டுக்கு சென்று ஒரு யானையைக் காட்டுகிறார். அதன் உடம்பை 20, 30 அம்புகள் துளைத்து இருக்கின்றன. சில அம்புகள் அதன் உடம்பிலேயே புதைந்தபடி காட்சியளிக்கின்றன. அம்புபட்ட இடங்களிலிருந்துகுருதி கொட்டிக் கொண்டிருக்கிறது. "அப்போதும் அந்த யானை அழாமல் வருந்தாமல் சுருண்டு விழாமல் பீடு நடை நடந்து, தன் பெருமிதத்தை நிலைநிறுத்துகிறது பார்" என்று வள்ளுவர் நம்மைத் தூண்டுகிறார். அப்போதுதான் நமக்கு, எத்தனை இடையூறு வந்தாலும் சிறிதும் கலங்காமல் நாம் மேற்கொண்ட காரியத்தைச் செய்யும் துணிவும் ஏற்படுகிறது. எப்படி இந்த அறிவுரை!

        சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
        பட்டுப் பாடூன்றும் களிறு (597)

இது எட்டாவது யானை.

திருக்குறளில் உள்ளதே எட்டு யானைகள்தாம். அந்த எட்டு யானைகளையும் வள்ளுவர் செயல்திறனுக்கே பயன்படுத்தி நம்மை ஊக்குவிக்கிறார். எப்படி குறள் காட்டும் செயல்திறன்?

இவற்றைப் படித்ததும், எதையாவது செய்து தீர வேண்டும் என்ற எண்ணமும் ஊக்கமும் நமக்கும் உண்டாகின்றன. செயலில் இறங்குகிறோம். உடனே வள்ளுவர்,

"தம்பி! செயல்திறனைக் காட்டுவதற்காக எதையாவது செய்துவிடாதே. செய்யத் தக்கதை மட்டுமே செய்ய வேண்டும். அதைச் செய்யாவிட்டாலும், செய்யத்தகாத எதையும் செய்துவிட்டாலும் நாடும் கெடும்; சமூகமும் கெடும்; குடும்பமும் கெடும்; நீயும் கெடுவாய்" என்று கூறுகிறார்.