பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறளில் நகைச்சுவை

நகைச்சுவை:

நகைச்சுவை என்பது மக்களுக்கென்றே உண்டான அரிய சுவையாகும். ஏனைய பிறவிகளுக்கு நகைச்சுவையை நுகரும் வாய்ப்பு இல்லை, நகைச்சுவையினை அறிந்து பயனடையாத மக்கள் வாழ்க்கை பயனற்றதாகும்.

நகைச்சுவைக்கு இலக்கணம் என்று ஒன்றினை வரம்பமைத்துக் கூறிக்கொள்ள வேண்டியதில்லை. புன்முறுவலும் முகமலர்ச்சியும் நகைச்சுவையினைக் காட்டும் நிகழ்ச்சிகள் என்று கூறிக்கொள்ளலாம். ஆசிரியர் வள்ளுவனார் காட்டும் நகைச்சுவைப் பகுதிகள் மிகவும் சிந்திக்கத் தக்கனவாகும். நகைப்புத் தோன்றும் இடங்கள் பாகுபடுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.

மனத்தில் மகிழ்ச்சியும் முகத்தில் நகைப்பும் தோன்ற வேண்டும். மனம் மகிழாமல் முகத்தில் தோன்றும் நகைச்சுவை சுவையாகாது. நடைமுறையில் இதனை, ‘பச்சைச் சிரிப்பு’ என்கிறார்கள்.

ஆசிரியர் வள்ளுவனார் பல்வேறுபட்ட இடங்களில் நகைப்பினை அமைத்துக் காட்டுகிறார். சிரித்து மகிழ்தல் என்னும் நகைச்சுவை ஒருவரால் தன்னந்தனியே தனித்திருந்து செயல்படுவது அன்று. ஒருவன் தனியாக இருந்து கொண்டு தானாகச் சிரித்து மகிழ்தல் முடியாது. அது கூடாது என்றும் கூறுதல் வேண்டும்.