பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

முடியாதாகையால், மக்கட் பிறவிக்குமட்டும் சிறப்பாக அமைந்துள்ளது இப் பண்பாடு என்பதை நன்றாக எடுத்துக் காட்ட வேண்டித்தான் ‘மக்கள் உயிர்க்கு’ என்று தெளிவு படக் காட்டினார்.

இன்பமாக இருக்கும்போது ஈகைக் குணம் சிலருக்கு எதிர்பாராத முறையில் வந்துவிடுதல் உண்டு. துன்பக் கவலையில் இருக்கும்போது அங்ஙணம் வாராமல் இருந்து விடுதல் இயற்கையென்றுகூட நாம் கூறலாம். இன்பமாக இருக்கும்போதும் எள்ளளவும் ஈகைக் குணம் என்பதே தோன்றாத பிறவிகள் இருந்தால் அவைகளை நாம் என்ன வென்று கூறுவது!

தந்தி :

பெரிய வேலை யொன்றுக்கு முயற்சி செய்ய வெளியூர் சென்றிருந்தான் ஒரு மகன். வேலை கிடைத்தவுடனே தந்தி கொடுக்குமாறு தகப்பனார் சொல்லி அனுப்பி இருந்தார். நாள்தோறும் தபால்காரரை தகப்பனார் எதிர்நோக்கிக்கொண்டிருந்தார். ஒரு நாள் தபால்காரர், ‘ஐயா, தங்களுக்குத் தந்தி வந்திருக்கிறது’ என்றார்.

உடனே பையனுடைய தகப்பனார் வீட்டிற்குள்ளிருந்து வேகமாக வெளியில் வந்தார். அவர் ஓடிவந்த வேகம் தபால்காரரைக்கூடத் திகைக்க வைத்துவிட்டது. வந்தவர் தந்தியை வாங்கினார். பிரித்துப் பார்த்தார்; சிறிது நேரம் பேசாமல் இருந்தார். பிறகு துக்கித்துக் கொண்டவராய் அப்படியே சுவரில் சாய்ந்தார். அவர் முகத்தினைச் சோகம் அப்படியே கவ்விக்கொண்டது. தபால்காரர் அவர் முகத்தைப் பார்க்கச் சகிக்கமுடியாதவராய்த் திரும்பிவிட்டார்.

அதற்குள் தன் கணவன் சுவரில் துக்கமாய்ச் சாய்ந்திருப்பதைக் கண்ட மனைவியார் ஒடோடியும் வந்து கணவர் இருக்கும் நிலையைப் பார்த்தார். அதற்குள் கணவர் முகத்தில் மகிழ்ச்சியும் புன்முறுவலும் தோன்றின.