பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

துக் காட்டாதீர்கள்”...“வீட்டிற்குப் பெரியவர் நீங்கள், நீங்களே இப்படி முகத்தை வைத்திருந்தால் சின்னஞ்சிறுசுகள் எப்படித் தாங்கும்?”... என்று இப்படியெல்லாம் பேசுகின்ற நடைமுறைப் பேச்சுக்கள் நாம் அறியாதவை அல்ல.

ஆதலால்தான் நகைச்சுவையைப்பற்றிப் பேசுகின்ற வள்ளுவனார், தாம் நூல் முழுதும் கூறுகின்ற நகைச்சுவை இடங்களுக்கெல்லாம் அடிப்படையாக ‘முகம் நகுதல்’ என்றும் சுட்டிக் காட்டுகின்றார்.

மனத்தில் கோபம் வந்தால் அதனையும் காட்டுவது முகமேதான். கண நேரத்தில் கோபக் குறியினை முகம் காட்டிவிடுகிறது. நாம் பேசிக்கொள்ளுகின்ற நகைச்சுவைக்கு முகந்தான் எடுத்துக்காட்டு என்பதனைத் தெளிவாகப் புரிந்துகொண்டோம்.

இவ்வளவு ஆற்றலும் இன்றியமையாத் தன்மையும் மூலகாரணமான இலக்கணமும் தனக்குள்ளே அமையப் பெற்றிருக்கின்ற முகத்தினைத் திருவள்ளுவர் சிறப்புச் செய்து கூறுகின்றார். ‘முகம் முதுக் குறைந்தது’ என்பது திருவள்ளுவர் குறிப்பு. ‘முதுக் குறைந்தது’ என்றால் அறிவில் மிகுந்தது என்று அர்த்தமாகும். இவ்வாறு திருவள்ளுவர் மிகச் சிறப்பாகக் குறிப்பிடுவதற்குக் காரணமில்லாமலில்லை.

ஒருவருடைய மனம் உவகைகொண்டு மகிழ்ந்தாலும், அல்லது கோபங்கொண்டு காய்ந்தாலும் அதனை மற்றவர்களுக்கு உடனுக்குடனே முந்திக்கொண்டு புலப்படுத்துவது முகமன்றோ? இவ்வாறு இருக்க, முகத்தினை நம் ஆசிரியர் வள்ளுவனார் சிறப்பித்துப் பேசுவதில் வியப்பு ஒன்றும் இல்லையேதான். சுவை மிக்க அக் குறட்பாவினைச் சிறிது சிந்தித்துக் கொள்ளுவோம்.

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ? உவப்பினும்

காயினும் தான்முந் துறும்.