பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வகைகள்:

சொல்லி வைத்துச் சிரிக்க வைப்பது என்பது நடைமுறை வழக்கத்திற்கு மாறுபட்டதாகும். அது நடைமுறை வழக்கமும் அன்று. “அவர் சிரிக்கச் சொன்னார்; அதனால் சிரிக்கின்றேன்” என்று பேசுபவர்களை நாம் பழக்கத்தில் பார்ப்பதில்லை. தானாகவே-இயல்பாகவே-உளம் மகிழ்ந்து முகம் மலர்ச்சிகொண்டு புன்முறுவல் தாங்கிச் சிரித்து மகிழ்வதுதான் நகைச்சுவை என்பதாகும்.

நகைச்சுவை என்பதற்கு வரம்பு உண்டு; பொது இலக்கணம் உண்டு. சிரித்து மகிழ்வதற்கெல்லாம் நகைச்சுவையென்ற பெயர் பொருந்தாது. உள்ளத்தின் அதாவது மனத்தின் தொடர்பு இல்லாமலேயே சிலவற்றை - சில காட்சிகளைக் கண்டதும் சிரிப்பு ஏற்படுகிறது.

எடுத்துக்காட்டாக நடைமுறையில்-உலகப் போக்கில்-பேசப்படுகின்ற ஒரு சில சொற்கள் சிரிப்பதற்குக் காரணமாக இருக்கின்றன. ‘கிண்டல்’ என்றும், ‘நையாண்டித்தனம்’ என்றும், ‘கோமாளித்தனம்’ என்றும், ‘கிறுக்குத்தனம்’ என்றும் ஒருவிதக் கருத்துக்கள் அடங்கிய நிகழ்ச்சிகளைக் காணும் பொழுது சிரிக்கின்றோம். இவைகளுக்கு நகைச்சுவை என்னும் இலக்கணம் பொருந்தாது. இவை பெரும்பாலும் உடம்பினால் நிகழ்த்தப்படுகின்ற செயல்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகின்றனவாம்.

ஆதலால்தான் சிரிப்பு என்னும் ஒன்றினைமட்டும் காரணமாகக் கொண்டு நகைச்சுவை என்பதனைக் கணக்கிட முடியாது. நகைச்சுவை என்பது ஆழ்ந்த கருத்தினையும் பயனையும் அறிவின் அடிப்படையையும் உள்ளம் நெகிழ்தலையும் கொண்டதாகும். எனவேதான் உடல் வளர்ச்சிக்கும் உள்ளம் மகிழ்தலுக்கும் நகைச்சுவை பெருங்காரணமாகக் கூறப்படுகின்றது.