பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

நகைச்சுவை அல்லது சிரித்து மகிழ்தல் என்பது மக்களாகப் பிறந்த அனைவர்க்கும் இயல்பாகவே இருக்கவேண்டிய முதன்மையான குணம் என்று பேசப்பட்டாலும் எல்லோருமே அப்படி இருந்துவிடுதல் இல்லை என்றும் கூறுதல் வேண்டும்.

மக்கள் வாழ்க்கையினைத் தெளிவாக அளந்து கணக்கிட்டுக் காட்டும் நம் ஆசிரியர் வள்ளுவனாரும் நகைத்து மகிழ்ந்து வாழாத மக்களும் உண்டு என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுக் காட்டத் தயங்கவில்லை. வாய்ப்புகள் கிட்டும்போது மகிழ்ந்து சிரித்துப் பழகும் பண்பில்லாத மக்களைக்கூட நாம் மன்னித்து விடலாம். ஏன்? இவர்களை விட மிகமிக மோசமான மக்கள் வகையினரும் உண்டு.

சில பிறவிகள்:

சிலர் எக்காலத்திலும் ‘கலகல’வென்று பேசிப் பழகும் பழக்கமில்லாமல் இருப்பர். அப்படிப்பட்டவர் வீட்டில் இருக்கும்பொழுது மற்றவர்கள்—பெண்டிர்—பிள்ளைகள் முதலானோர் சிரித்து மகிழ்வதைக் கண்டால் சகிக்க மாட்டார்கள்.

அப்படிச் சிரித்து மகிழ்கிற ஒலி சிறிது கேட்டாலும் அதனை வெறுத்துக் கோபித்துக்கொள்ளவும் செய்வர். இப்படிப்பட்டவர்களையும் ஒரு வகைப் பிறவிகள் என்றுதான் நாம் சொல்லுதல் வேண்டும்.

ஆதலால்தான் நகைத்து மகிழ்ந்து வாழ்தல் என்பது பிறரோடு கலந்து வாழ்கின்ற வாழ்க்கைக்கு முதற்படியாகும் என்று ஆசிரியர் வள்ளுவனார் சொல்லாமல் சொல்லிவைக்கின்றார். முகமலர்ச்சி கொண்டவன் தான் பிறரோடு பழகுதல் கூடும். முக மலர்ச்சிக்கு மூலகாரணம் மனமகிழ்ச்சியாகும். மனமகிழ்ச்சி என்பது நகைச்சுவை இலக்கணத்தின் ஒரு கூறு ஆகும்.