பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

இருளாகத்தான் இருந்துவிடும். நகைத்து மகிழ்தல் என்னும் செயலினை ஆசிரியர் வள்ளுவனார் அடிப்படை உண்மையாகக் கொண்டு நல்லதொரு குறட்பாவினைத் தருகின்றார்.

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்

பகற் பொழுதும் இருளிலேயே கிடந்ததாகும் என்று குறித்துக் காட்டுகின்றாரென்றால் அதன் சுருக்கமான விளக்கம் யாது? உலகமறியாதவன் என்று வழக்கில் பேசப்படுகின்றானே, அவனேதான் இவனும் என்று அறிதல் வேண்டும்.

ஒரு நல்ல சிந்தனையினை நாம் வரவழைத்துக்கொள்ளுதல் தெளிவு தரும். சிரித்து மகிழ்தல் என்பதனை ஏதோ விளையாட்டுச் செய்கை என நினைப்பவர்களும் உண்டு. அப்படி நினைத்தல் தவறானதாகும்.

மனிதப் பண்பாடுகளில் மிக மிகத் தேவையான - பயனுள்ள - வளர்க்க வேண்டிய - தன்மைதான் நகைத்து மகிழ்தல் என்பதாகும் என்னும் குறிக்கோள் நமது வாழ்க்கையில் ஊறிவிடுதல் வேண்டும்.

நல்ல நகை:

மனித சமுதாயத்தைச் சேர்ந்து ஒன்றுபடுத்தி ஒற்றுமைக்கு வித்திட்டு வளர்ப்பது விரிந்த உள்ளமும் கூட்டுறவுமேயாகும். கூட்டுறவு என்பது நட்பு என்னும் அடிப்படையில் வளர்க்கப்படுவது.

நட்பு என்னும் நல்ல உள்ளம் தருகின்ற பரிசு ஆகும். ஆதலால்தான் நகைத்தல் - மகிழ்தல் - என்பது மனத்திலிருந்து வெளிப்படுதல் வேண்டும். மனத்தில் வெளிப்பட்ட பிறகு அந்த மகிழ்ச்சி முகத்தில் தோன்றும்.