பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

பினைக் கொண்ட தன்றோ? அக்காதல் நட்பின் நெருக்கத்தினை எளிதில் விளக்கிவிட முடியாதுதான். ஆசிரியர் வள்ளுவர் தலை சிறந்த எடுத்துக்காட்டினை நம் முன் விளக்கிக் காட்டுகின்றார்.

காதலர்:

உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பினை எவ்வாறு எளிதாக நம்மால் விரித்துக் கூறிவிட முடியும்? உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு எத்தகைய இன்றியமையாத தன்மையது? வாழ்க்கையே அது தானன்றோ!

எவ்வாறு அவைகள் ஒன்றுபட்டன? அவைகள் பிரிந்திருத்தல் என்பது கூடுமோ? சிந்தித்துத்தான் பார்க்க முடியுமா? இப்படியாக எவ்வளவோ கூறிக்கொண்டு போகலாம். அவ்வளவு சிறப்பாகக் காதலனும் காதலியும் தொடர்பு கொண்டு வாழ்கின்றார்கள் என்பதனை அருமையானதொரு குறட்பா கூறுகின்றது.

இக்கருத்தினைக் கூற வந்த ஆசிரியர் வள்ளுவனார் காதலன் வாயிலாகச் சிறந்த முறையில் வெளிப்படுத்துகின்றார்: “உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு எத்தன்மையதோ, அத்தன்மையாகவே, எனக்கும் இப் பெண்ணிற்கும் உள்ள தொடர்பு இருக்கின்றது”— இப்படியாகக் காதலன் கூறுகின்றான். இப்போது குறட்பாவினைப் பார்ப்போம்.

உடம்பொ(டு) உயிரிடை யென்னமற்று அன்ன
மடந்தையொ(டு) எம்மிடை நட்பு

நட்பின் வகையில் சிறப்புடன் உண்டாகின்ற காதல் வாழ்க்கையினைக் கண்டோம். அந்த நட்பும் உள்ளம் நகுமாறு உண்டானால் அதற்குச் சிறப்பு என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.