பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

நண்பர்கள் நகைத்து மகிழ்தல் என்பது வாழ்க்கை இலக்கணமாக விளக்கப்பட்டாலும் நகைத்தல் என்பதற்கு எல்லைக்கோடு போட்டு ஆசிரியர் காட்டிவிடுகின்றார். நண்பர்கள் நகைத்து மகிழ்ந்துகொண்டே இருத்தல் என்பது சிறந்த நட்பு என்பதற்கு அழகன்று என்று ஆசிரியர் அச்சுறுத்திக் கூறுகின்றார். நட்பு என்பது ஒருவரோடொருவர் நகைத்துப் பழகுவதற்குத்தான் என்று எண்ணிவிடாதீர்கள் என்பது வள்ளுவனாரின் வாக்காகும்.

ஒருவருக்கொருவர் உள்ளம் ஒன்றுபட்டுப் பெருந்துணையாக இருக்கவேண்டியதுதான் நட்பு என்பதற்கு அடிப்படை என்பதனை மறந்துவிடுதல் கூடாது. நண்பர்களுக்குத் தக்க முறையில் அறிவுரை கூறுதலும், தவறு செய்கின்ற போது எடுத்துக்காட்டி நல்வழிப்படுத்துதலும், உண்மை பேசி உள்ளம் ஒன்றுபடுதலும் நட்பிற்கு இலக்கணமாகும்.

நண்பன்:

அரசன் ஒருவன் தன் நண்பனான அமைச்சனுடன் ஊர் சுற்றி வந்தானாம். வந்த வழியில் கரும்புத் தோட்டமொன்று கண்ணில்பட்டது. இருவரும் கரும்பு தின்னப்போனார்கள். அரசன் கரும்பொன்றைத் தின்னும்போது அமைச்சனிடம் சொன்னான்: “என்ன, அமைச்சரே! இக் கரும்பு கசக்கின்றதே!”

இதைக் கேட்ட அமைச்சன் அரசனை நோக்கி, “நான் தின்னும் கரும்பும் அப்படித்தான் இருக்கின்றது. இந்தக் கரும்பே கசப்புதான்” என்று கூறினானாம்.

சிறிது நேரம் சென்று அரசன் அமைச்சனை நோக்கி “அமைச்சரே! இப்போது தின்னும் இந்தக் கரும்பு நன்றாக இனிக்கிறதே!” என்றான்.

உடனே அமைச்சர் அரசனை நோக்கி,...“ஆகா! எவ்வளவு இனிப்பு! நான் தின்னும் கரும்பும், மிகமிக இனிமையாக இருக்கிறது.” என்று பதில் சொன்னானாம்.