பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

உடனே அரசன் அமைச்சனை நோக்கி, “என்ன! அமைச்சரே! நான் சொல்லுவது போலவே நீங்கள் சொல்லுகிறீர்கள்!” என்று கேட்டான்.

அதற்கு அமைச்சன் “நான் தங்கட்கு அமைச்சனல்லவா? தங்கள் கருத்து எப்படிப் போகிறதோ அதே மாதிரி போக வேண்டியதுதானே என்னுடைய வேலை?” என்று கூறினானாம்.

இப்படிச் சொல்லிப் பழகுவதற்கு நட்பு என்று பெயரன்று. இதற்கு இடர்ப்பாடான கூட்டுறவு—சேர்க்கை—என்பதுதான் அர்த்தமாகும். நண்பன் சொல்லுவதற்கெல்லாம்—செய்வதற்கெல்லாம் ‘ஆமாம்’ போட்டுச் சிரித்து மகிழ்ந்து இருத்தல் நட்பு ஆகவே ஆகாது என்று திட்டவட்டமாகக் கூறுகின்றார்.

சிரித்து—நகைத்து—மகிழ்தல் என்பதில் ஆசிரியர் காணும் குறிப்புரைகள் சிந்தித்து மகிழத்தக்க ஆழ்ந்த உண்மைகளைத் தாங்கி நிற்கின்றன என்பதனை நாம் உணருதல் வேண்டும். ‘நகுதல் பொருட்டன்று நட்டல்’ என்ற சொற்களைக் கொண்டு குறட்பாவொன்று ஆரம்பமாகின்றது.

நகைத்து மகிழ்ந்து போவதற்காகவே தான் நண்பர்கள் என்று தவறாக எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்குத் திருவள்ளுவர் புதுமையான திருப்பம் தருகின்றார். நட்பு என்பது சிரித்து மகிழ்ந்து பொழுது போக்குவதற்கென்று எண்ணியிருக்காதீர்கள் என்ற வெளிப்படையான உண்மையினை, ‘நகுதற் பொருட்டன்று நட்டல்’ என்ற சொற்கள் விளக்கிவிடுகின்றன. அப்படியாயின் ‘நட்பு’ என்பதனை அக் குறட்பா மேலும் நமக்கு எடுத்துரைக்கின்றது.

நட்பு பயனுள்ளதாக இருத்தல் வேண்டும் என்பது நட்பின் இலக்கணமாகும். நண்பர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதுதான் முதல் தரமான நட்புக்கு அடையாளமு-