பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

மாகும். நண்பர்களுக்குப் பாதுகாப்பாக இருத்தல் வேண்டும் என்னும் கருத்தினை விளக்கிப் பேசுகின்ற இடத்தில் ‘மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு’ என்று கூறி மேலே கூறப்பட்ட குறட்பாவினை முடித்துவிடுகின்றார்.

நண்பர்கள் சில நேரத்தில் வரம்பு மீறி நடக்க ஆரம்பிப்பார்கள். ஒழுக்கத்திலிருந்து நழுவியும் செயல்பட ஆரம்பிப்பார்கள் அப்படி நடக்கின்ற செயலைத்தான் ‘மிகுதிக்கண்’ என்ற சொல் குறிக்கின்றது.

அப்படித் தன் நண்பன் வரம்பு மீறிய செயலினைச் செய்ய முனைகின்றான் என்று அறிந்து அதனை முன் கூட்டியே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பது நண்பர்களுக்கு அறிவுரையாகும். ‘மேற்சென்று’ என்று கூறுவது, நண்பன் முந்திக்கொண்டு, தவறு செய்கின்ற நண்பனைக் காப்பாற்ற வேண்டும் என்பதாகும். மற்றோர் அருமையான கருத்தும் விளக்கப்படுகின்றது.

கடமை:

இனிமையாகப் பேசித்தான் நண்பனைத் திருப்பவேண்டும் என்பது கடமையன்று. இனிமையான சொற்களினால் நண்பனைத் தவறு செய்யாமல் தடுக்க முடியவில்லையென்றால் கடுமையான சொற்களைச் சொல்லியும் திருப்ப வேண்டும், அடித்துக்கூடத் திருத்தலாம், திருப்பலாம் என்பது குறிப்பாக உணர்த்தப்பட்டது. ஆதலால்தான் ‘இடித்தற் பொருட்டு’ என்றும் கூறி வைத்தார்.

ஆகவே, நகைத்தல் - சிரித்து மகிழ்தல்-என்னும் தலையான கருத்தினைக் குறிப்பிடும் போது அக் கருத்தினை வைத்துக்கொண்டு நட்புக்கு அடிப்படையான மிகச் சிறந்த உண்மையினையும் வெளிப்படுத்தினார். எளிமையான சொற்களில் குறட்பா அமைந்துகிடக்கின்றது.