பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு

சிரித்து - நகைத்து - மகிழ்ந்து போவதுதான் நண்பர்களுக்கு அழகு என்று எண்ணி இருக்காதே; நண்பனை நல்ல வழியில் திருப்பிக் காப்பதுதான், நண்பர்களின் பயனுள்ள கடமை யாகும்.

நகைத்து மகிழ்தல் என்பது இன்றியமையாததொரு சிறந்த பண்புதான் என்றாலும், அதுவும் நட்பு என்னும் ஒன்றினை விளக்க வந்த இடத்தில் எவ்வாறு அரிய கருத்தினைப் புலப்படுத்திவிடுகின்ற தென்பதனை மறக்கலாகாது.

‘நகுதல்’ என்னும் சொல்லின் அடிப்படையில் எழுகின்ற உண்மைகள் மிகப் பலவாகும். காரண காரியங்களைப் பகுத்துப் பார்த்துத் தெளிவு உண்டாகின்றபோது மெய்ப்பொருள் விளங்கிவிடுகின்றது. ‘போலி வேடதாரிகள்’ என்று நாம் பழக்கத்தில் பேசியும் கண்டும் வருகின்றோம்.

சமுதாயத்திற்கு இத்தகையோர் மிகுந்த இடரினை உண்டாக்குபவர் ஆவர். இவர்களின் முதன்மையான தீய நடத்தை ஒழுக்கக் கேடு என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. உள்ளத்தில் அத்தனையும் வஞ்சகமாகவும் நஞ்சாகவும், வைத்துக்கொண்டு வெளியில் தூய்மையுள்ளவர்கள் போலப் பேசிக் காட்டியும், நடந்து காட்டியும், திரிகின்றவர்களைப் பார்த்து, வெளியில் மக்கள் சில காலம் நம்பி ஏமாந்தாலும் - மனச்சாட்சி அவர்களைக் கண்டு நகைக்கும் என்கிறார். ஏன்?

அப்படி நகைப்பதன் காரணம் யாது? என்றாலோ, என்றேனும் பெரும் துன்பம் அவனுக்கு வந்தே தீரும் என்கின்ற உண்மையினை அவன் அறிந்து கொள்ளாமல், ஒழுக்கக் கேடான நடத்தைதான் பயன் தரும் என்று எண்ணி இருக்கிறானே என்பதை எண்ணியேயாகும் என்பதுதான் காரணம் என்று நாம் அறிதல் வேண்டும்.