பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

யாத இன்ப எண்ணங்களைக் காட்டிவிட்டதே! அப்படிப்பட்ட நகைப்பினை ஒரு குறட்பா எடுத்துக்காட்டுகிறது.

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளது ஒன்(று) உண்டு.

உள்ளத்தில் உள்ள எண்ணத்தினை மறைப்பது போல மறைத்துக் காட்டுகிறது. அந்த நகைப்பு என்று தோன்றினால் அந்த நகைப்பினால் அவள் உள்ளத்தில் கொண்டுள்ள இன்ப வேக எண்ணத்தினையும் அந்த நகைப்பு காட்டிவிடுகின்றது என்று ஆசிரியர் எடுத்துரைப்பது மிகவும் ஆழ்ந்த பொருள் தாங்கிக்கிடக்கின்றதென்பது உண்மையிலும் உண்மையாகும்.

அரும்பு முகிழ்த்திருப்பது நகைப்பையும், அரும்புக்குள் இருக்கும் மணம் அவள் உள்ளத்திலிருக்கும் இன்ப உணர்ச்சியினையும் காட்டி நின்றன. நகைச்சுவை தருகின்ற நற்பயன்களுள் இதுவும் ஒன்று போலும்!

நூல்கள்:

ஆசிரியர் திருவள்ளுவர் நமக்கு அளித்துள்ள ஒப்புயர்வற்ற குறட்பாக்களின் ஆழ்ந்த எண்ணக் கருத்துகளைப் பன்முறை சிந்தித்துப் பார்க்கும்போது அறிவுக்கேற்ற தலைசிறந்த உண்மைகள் புலப்பட்டே தீரும்.

நூல்களை இரண்டு வகைகளாகப் பிரித்துக்கொள்ளுதல் வேண்டும். ஒருவகை சாதாரண நூல்களாகும்; மற்றவகை ஆழ்ந்த பொருள் கொண்டவைகளாகும்.

முதல் வகையான நூல்களை ஒரு முறை படித்தாலே போதும்; கருத்துகள் எளிமையாகப் புரிந்துவிடும். எடுத்துக்காட்டாக, கதை நூல்கள், வரலாற்று நூல்கள், வாழ்க்கை வரலாறுகள் போன்றவைகளை நாம் ஒருமுறை படித்துப் பார்க்கும் போதே கருத்துகள் புலனாகிவிடும்.