பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

மற்ற வகையான நூல்கள் அப்படிப்பட்டவைகள் அல்ல. பன்முறையும் சிந்தித்துப் பார்த்து உணர்ந்துகொள்ளுதல் வேண்டும். இவைதான் மெய்ப்பொருள் நூல்கள், வாழ்க்கையின் உண்மை நூல்கள் எனப்படுபவைகளாகும். இத்தகைய நூல்களைப் படித்துப் பார்த்து உரைகளும் கருத்துகளும் விளங்கிவிட்டன என்று மட்டும் இருந்துவிட்டால் போதாது. உலக அனுபவ உண்மைகளுடன் ஆழ்ந்து சிந்தனை செய்து அதன் பின்னரே அங்குப் பொதிந்துகிடக்கும் புதை பொருளினைக் கண்டு மகிழ்தல் வேண்டும்.

நம் ஆசிரியர் தந்துள்ள குறட்பா முத்துக்கள் அனைத்துமே அவ்வாறு தம்முள் விலை மதிக்க முடியாத எக்காலத்திற்கும் ஒத்துவரும் மனித வாழ்க்கையின் இன்ப முத்துக்கள் கொண்டவை என்றே கூறுதல் வேண்டும்.

நிலம்:

நிலத்தில் உழுது பயிரிடுபவனுக்கும், ஆழ்ந்து பல அடிகள் தோண்டிப் பூமிக்குள் செல்பவனுக்கும் வேறுபாடுகளைக் காணுகின்றோம். பயிரிடுகிறவன் அதிக ஆழமாக நிலத்தினை உழவேண்டிய அவசியமில்லை. தேவைக்கேற்ற அளவு நிலத்தினை உழுகின்றான்; பயிரிடுகின்றான். அதனால் வருகின்ற உணவுப் பொருள் அளவோடு கிடைக்கின்றது. உண்ணும் உணவாக இருந்து முடிகின்றது. ஆனால் மற்றோர் உண்மையினை நாம் நன்கு புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

பூமிக்கடியில் ஆயிரக்கணக்கான அடிகள் ஆழத்தில் அல்லது நூற்றுக்கணக்கான அடிகள் ஆழத்தில் செல்லுகின்றவன் எதைக் கண்டுபிடிக்கின்றான்? நமக்குத் தெரியாததன்று. விலை மதிக்க முடியாத என்றும் நிலைத்து நிற்கின்ற தங்கத்தை வெட்டி எடுக்கின்றான். இன்னும் இது போன்ற உயர்ந்த பொருள்களைக் காணுகின்றான். பூமியில் ஐந்தடி ஆழம், பத்தடி ஆழத்தில் செல்பவனுக்குத் தங்கம் கிடைக்குமா? கிடைக்காதே!