பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

பக்குவமாகவும், மறைவாகவும் இருக்குமாறு உணர்த்திக் கருத்துகளைப் புரிந்து நமக்கு ஏற்படுவதே நகைச்சுவையின் இலக்கணமாகும்.

பிரிந்து சென்ற காதலன் குறித்த காலத்தில் திரும்பிவரவில்லை. ‘மழைக் காலத்திற்கு முன் வந்துவிடுவேன்’ என்று சொல்லிச் சென்றான். மழைக்காலம் வந்துவிட்டது, மழையும் பெய்தது. நாயகிக்கு ஒன்றும் புரியவில்லை. குறித்த காலத்தில் தலைவன் வராமல் இருந்துவிட்டானே என்று கடிந்துகொண்டாள். வருத்தம் மேலிட்டவளானாள்.

தோழி இதனைக் குறிப்பால் உணர்ந்து கொண்டாள். தலைவியைப் பார்த்து, “ஏனம்மா! வருந்துகிறீர்கள். அவரைக் கடிந்துகொள்ளுகிறீர்கள்?” என்று கேட்டாள்.

அதற்குத் தலைவி, “தலைவர் பொய் சொல்லி ஏமாற்றிவிட்டார். அவர் மழைக்காலம் வருவதற்கு முன் வருவதாகச் சொல்லிச் சென்றார்; வரவில்லையே! மழைக் காலமும் வந்து விட்டது! மழையும் பெய்கிறதே! உனக்குத் தெரியவில்லையா?” என்றாள். உடனே தோழி நயமாகக் கூறுகிறாள்:

“அம்மா! தலைவர் ஒருகாலும் பொய் சொல்ல மாட்டார்; சொன்னபடியே வந்து விடுவார்; இன்னும் மழைக்காலம் வரவில்லையே அம்மா! இப்போது பெய்கின்ற மழை இந்தப் பருவ காலத்து மழையில்லையே! சென்ற ஆண்டில் பெய்ய வேண்டிய பருவ மழை முழுதும் பெய்யாமல் விட்டுப்போயிருந்து எஞ்சி இருந்த மழைதான் இப்போது பெய்கிறது.

இதை இந்த ஆண்டின் பருவ மழையென்று நீங்கள் ஏமாந்து போனீர்கள்! இந்த ஆண்டின் மழைக்காலம். இன்னும் வரவில்லையம்மா! அக் காலம் வருவதற்கு முன் தலைவர் சொன்னபடியே வந்து விடுவார். வருத்தப்படாதீர்கள்; அவரைக் கடிந்து கொள்ளாதீர்கள்.”