பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

இவ்வாறு தோழி சொல்லி முடித்தவுடன் தலைவிக்கு எப்படி இருந்திருக்கும்? தோழி சொல்லியது உண்மையா பொய்யா என்பது சிந்திக்க வேண்டிய பெரிய கருத்தன்று. ஆனால் அவள் பக்குவமாகக் கூறி முடித்த கருத்தில் நயமும் நகைச்சுவையும் எவ்வாறு படர்ந்து மிளிர்கின்றனவென்று காணும்போது வாழ்க்கையில் நகைச்சுவையின்பத்திற்கு உள்ள நுண்ணிய இடம் உணர்ந்துகொள்ள முடிகிறது.

நகை, நகல், நகைப்பு, நகுதல் என்பன போன்ற சொற்களை வெளிப்படையாகவே கூறி நகைச்சுவையான இடங்களையும் அதனைச் சேர்ந்த கருத்துகளையும், விளக்கங்களையும் ஆசிரியர் தருவதோடல்லாமல் வேறு பல இடங்களிலும் நகைச்சுவைக் கருத்துகளை அருமையாக அமைத்துக் காட்டுகிறார்.

“பேசாமல் மரம் போல் நிற்கின்றானே!” என்று பேசுகிற பேச்சினை நாம் நடைமுறையில் பல இடங்களில் கேட்டு வருகின்றோம். மனிதன் ஏன் அப்படிச் சொல்லப்படுகின்றான்? மரம் என்று அழைக்கப்படுகின்றான்? பேசவேண்டிய இடத்தில் பேசாமல் நிற்கின்றானே என்பதனாலன்றோ? வெளிப்படையாகவே உண்மைகளைக் கூறுகின்ற வள்ளுவனார் மறை பொருளாகவும் கண்டித்து மெய்யுரை தருகின்றார்.

விலங்கினம்:

உணவு மக்களுக்கு இன்றியமையாத முதன்மையானதுதான். எந்த அளவு மனிதன் உணவினை உட்கொள்ள வேண்டும் என்பது தெரிந்துகொள்ள வேண்டிய கருத்து. அதனை விளக்க வேண்டிய இடத்திற்கு வருகின்றார் ஆசிரியர்.

இன்ப வாழ்க்கைக்குத்தான் உணவு சாப்பிடுகின்றோம்; துன்பம் வருவதற்கா உணவு உண்ணுகின்றோம்? இல்லையே. எப்படி உணவினை உண்ண வேண்டும் என்று