பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

பற்றி விளையாட்டாகவும், கேலியாகவும் பேசுவதுண்டு, நம்மவர்களில் பலர் கேட்டும் இருக்கலாம்.

வெள்ளையர்களைத் துரைகள் என்று கூப்பிடுவது வழக்கமாகிவிட்டது; வெள்ளையர் வீட்டில் பணியாட்கள் பலர் இருப்பார்கள். பெரும்பாலும் வெள்ளையர்கள் மனைவிமார்களுடன் வர ஆரம்பிக்கவில்லை; பின்னரே அவ்வாறு வந்தனர்.

வெள்ளையரின் பணியாட்களில் முதலிடம் வகிக்கும் முதன்மையானவர் சமையல்காரர். அவருக்கு ஆங்கிலத்தில் ‘பட்லர்’ என்று பெயர். அவரிடம், ‘துரை என்ன செய்கிறார்?’ என்று கேட்டால், ‘சாப்பிடுகிறார்’ என்று சொல்லமாட்டார். ‘துரை தீனி தின்கிறார்’ என்று மிக இயல்பாகச் சொல்லுவார்.

இதற்கு என்ன காரணம் என்பது நமக்குத் தெரியாததுதான்! ஆனால் வெள்ளையர்கள் சாப்பிடுகிற நேரம் ‘அதிகம்’ என்பது மட்டும் உண்மை. அவசரம், அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்திருத்தல் வெள்ளையர்களுடைய பழக்கமாக எப்போதும் இல்லை.

அளவு கடந்து அதிகமாகச் சாப்பிடுகிறவர்களை ஆசிரியர் வள்ளுவனார் உணவு சாப்பிடுகிறார்கள் என்று கூறவில்லை. அப்படி உண்ணுகிறவர்கள் உண்ணும் பொருளை ‘இரை’ என்று பெயர் வைத்து அழைக்கின்றார்.

‘இரை’ என்பது மக்கள் சாப்பிடும் உணவுக்கு வைக்கப்பட்டழைக்கும் பெயரன்று என்பது நாம் அறிந்ததே. மக்கட் பிறவிக்குக் கீழான பிறவிகள் உண்பதைத்தான் ‘இரை’ என்று சொல்லுவது வழக்கம். எனவே ஒருவனை விலங்கு (மிருகம்) என்று சொன்னால் வருத்தப்படுவான்.

‘அதிகமாகச் சாப்பிடாதே’ என்று ஆசையோடு சாப்பிடுகிறவனைக் கண்டித்தாலும் வருந்துவான். பின்னர் எப்படித்தான் அப்படிப்பட்டவர்களைத் திருத்துவது.