பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

வள்ளுவர் கூறுகின்ற முறை நயமாகவும் அமைதியான நகைச்சுவை பொதிந்ததாகவும் காட்சியளிக்கின்றது. ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும்.

“குறைவாக உண்ணுவதுதான் நல்லதென்று உணர்ந்து சாப்பிடுபவனிடத்தில் இன்பம் மிகுதிப்பட்டு இருப்பது போல், மிகப்பெரிய இரையை விழுங்கி மகிழ்பவனிடத்தில் நோய் நீங்காதிருக்கும்”—இக் கருத்து நிறைந்து நிற்கும் குறட்பாவினைக் காண்போம்:

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்.

குறைந்த அளவே சாப்பிடுதல் வேண்டும் என்னும் மக்கட் பண்பாட்டினை உணர்ந்து சாப்பிடுகிறவனை, ‘இழிவறிந்து உண்பவன்.’ என்று சொன்னார். அப்படிப்பட்டவனைக் குறிக்கும் போது ‘உண்பான்’ ஒன்று சொல்லிவைத்தார்.

மிகுதி (கழி) யாகச் சாப்பிடுகிறவனை நேரிடையாக, விலங்கினத்தான் - என்று கூறாமல் ‘இரையான்’ என்று சொன்னார். என்னே சொல்லுக்குச் சொல் வேறுபாடு!

அளவுக்கு மீறித் தடித்து பருத்த உடம்புடன் வருகின்ற ஆளைப்பார்த்துச் சிலர், பெரிய ஜீவன் வருகிறது என்று கூறிச் சிரிப்பார்கள். ‘மனிதன் வரவில்லை’ வேறு ஏதோ வருகிறது என்னும் எண்ணம் அவர்கள் சொல்வதில் அமைந்திருக்கின்றது போலும்!

இப்படியான மனித இயல்புகளுக்கு எல்லாம் மூலமாகவும், அறத்தையும் உணர்த்தி, வாழ்க்கை முறையினையும் நிறுத்தி, மக்களையும் திருத்தி அங்கே பக்குவமாக, நல்ல நகைச்சுவை இத்தனையும் அடக்கிக் காட்டுவதில் நம் ஆசிரியருக்கு இணை எவரே உளர் என்று கூறுவதைவிட நாம் வேறு யாது சொல்லவல்லேம்!

நகைச்சுவையினை எடுத்துக்காட்டமட்டும் இக்குறட்பாவினை இங்கு நாம் குறிப்பிடவில்லை, ‘மருந்து’ என்ற