பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

பகுதியில் இவ் வரிய குறட்பா பேசப்படுகிறது. நோயற்ற வாழ்விற்கு ஆசிரியர் ஒப்பரிய உண்மைகளை நமக்கு இப்பகுதியில் தருகின்றார். அவைகளில் ஒன்றுதான் நாம் மேலே விளக்கித் தந்த குறட்பாவுமாகும்.

உண்ணும் உணவினைக் குறைந்த அளவில் உண்ணுகின்ற முறையினால் வருகின்ற இன்பம் மிகச் சிறந்ததென்பதும், மிகுதியாக உண்கின்ற பழக்கம் நோய்க்கு முதற்காரணம் என்பதும் வெள்ளிடை மலை, மேலும் ஒன்று; அளவு கடந்த புசிப்பு விலங்கின் குணத்தைத் தரும் என்பதும் குறிப்பு.

நகைத்தல் என்பது இன்பத்திலும் மகிழ்ச்சியிலும்தான் உண்டாவது என்று மட்டும் கொள்ளுதல் இயற்கை உண்மைக்குப் பொருந்தாததாகும். இன்பமும் மகிழ்ச்சியும் இல்லாத காலத்திலும் நகுதல் ஏற்படும். இதனை நாம் உலக வாழ்க்கையில் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.

கொடிய துன்பம் நேரிட்ட காலத்திலும் சிரிப்பு வருதல் உண்டு. அதற்குப் பொருள் வேறுபட்டதாகும். இன்னும் சொல்லப்போனால் கடுங்கோபத்திலும் நகைப்பதைக் காணுகிறோம்.

சில நேரங்களில் ஆண்கள் சிரிப்பதற்கும் பெண் சிரிப்பதற்கும் பெருத்த வேறுபாடு உண்டாகிவிடுகின்றது. ஓர் ஆண்மகன் மற்றோர் ஆடவனைப் பார்த்து எள்ளி நகையாடினால் எள்ளப்படுகின்ற ஆண் வருத்தப்பட்டாலும் அவ்வளவு கடுமையாக அவ் வருத்தம் தாக்காமற் போகலாம்.

அதே நேரத்தில் ஆண்மகனை ஒரு பெண் எள்ளி நகையாடுவாளேயானால் அதனைத் தாங்கமுடியாத துன்பமாக ஆண் நினைத்துவிடுகின்றான். இதுவும் ஒரு வகை. கவிச்சக்கரவர்த்தி கம்பர் குறிப்பிடுகின்ற ஓர் இடம்!