பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

பெண் சிரிப்பு

இலங்கை வேந்தன் இராவணன் போர்க்களத்தில் அவமானமுற்றான். வீரனுக்கு வெட்கம் பொறுக்க முடியாததாகிவிட்டது. வீடு திரும்புகின்றான். அவன் உள்ளத்தில் அப்போது தோன்றிய எண்ணங்கள் எண்ணில. அவைகளில் ஒன்று இலங்கைவேந்தன் வீரவேந்தன் இந்தநிலை அடைந்துவிட்டானே என்பது.

தன்னுடைய படை வீரர்களும் பகைவர்களும் ஏளனமாக நினைத்து நகைப்பார்களே என்கின்ற நினைப்புக்கூட அவனை அவ்வளவு வேதனைப்பட வைக்கவில்லையாம். “நம்முடைய அவக்கேட்டை நினைத்து ஒரு பெண் சிரித்துவிடுவாளே! நம்மை மிகப் பெரிய வீரன் என்று நினைத்திருக்கச் செய்தோமே! அவள் ஏளனமாகச் சிரித்தால் எப்படித் தாங்குவேன்!” என்று அவன் உள்ளம் துடியாய்த்துடித்ததாம். யார் அப் பெண்?

அவள் தான் இலங்கை வேந்தன் சிறைப்படுத்தி வைத்திருக்கும் சானகி என்னும் சீதாபிராட்டியாவாள். கம்பர் அழகாகக் குறிக்கின்றார்: “சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான்”—இவ்வாறு நகைப்பின் வகைகளைத் தனிப்படப் பிரித்துணர்ந்து நாம் கண்டாலும் ஆண் ஆழ்ந்தறிய வேண்டிய உண்மைகள் நம்மைக் கவர்ந்துவிடுகின்றன.

நமக்குள்ளே நாம் சிரித்துக்கொள்ள வேண்டிய இடமொன்றினை ஆசிரியர் வள்ளுவனார் நமக்கு எடுத்துக்காட்டுகின்றார். அதனைத் துன்பத்தில் சிரிக்க வேண்டிய சிரிப்பு என்று நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும். துன்பத்தில் ஏன் சிரிக்க வேண்டும் என்று கேட்பது உண்மையான வினாத்தான். துன்பத்தில் சிரிப்பது துன்பத்தினை வரவேற்பதாகாது. அதனைத் தொலைப்பதாகும் என்கிறார்.

3