பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

துன்பம்:

துன்பம் வந்த காலத்தில் அதனைத் தொலைத்து-நீக்கி-இன்பம் பெற வழி செய்தல் அறிவுடைய மக்கள் கடமையாகும். துன்பம் வருவது எவ்வாறு என்பதும் ஏன் வருகிறது துன்பம் என்பதும் புரிந்துகொள்ளமுடியாததன்று. அறியாமையினால் ஒருவன் துன்பத்தை வரவழைத்துக் கொள்ளுகிறான். அப்படி வரும் துன்பத்தினை முயன்று போக்கிக்கொள்ளுதல் வேண்டும்.

சிந்தித்துப் பார்க்கும்போது துன்பம் உண்டாவதற்கு நாமே காரணம் என்பது புலனாகும். அறிவில்லாதவன் தனக்குத் தானே துன்பத்தை வரவழைத்துக் கொள்ளுவான் என்று ஆசிரியர் சுருக்கமாகச் சொல்லி நிறுத்திவிடவில்லை. அப்படி அவன் வரவழைத்துக்கொள்ளுகின்ற துன்பம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதனையும் அழகாக எடுத்து விளக்கி விடுகிறார்.

அறிவில்லாத அவன் தனக்குத் தானே வரவழைத்துக் கொள்ளும் கொடுந் துன்பத்தினை அவன் பகைவர்கள்கூட அவனுக்குச் செய்யமுடியாதாம்! அப்படியென்றால் அவன் எவ்வளவு இழிவான புல்லறிவாளனாக இருக்க முடியும்! சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்.

‘புல்லறி வாண்மை’ என்னும் பகுதியில் அறிவில்லாதவர்களில் பற்பல கூறுபாடுகளைச் சொல்லிவருகின்ற ஆசிரியர், பகைவர்களும் செய்யமுடியாத துன்பத்தினைத் தாமே தமக்கு வரவழைத்துக்கொள்வார்கள் என்கிறார்.

அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது

ஒருவனுக்குத் துன்பம் உண்டாவதற்குக் காரணம் அவனுடைய பகைவர்கள் என்பது ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மைதான்.