பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

இங்கே, ஆசிரியர் வள்ளுவனார் குறிப்பாக அமைத்துக்காட்டும் மறை பொருளொன்று அறியக் கிடக்கின்றது. பகைவர்கள் தீங்கு செய்யவேண்டுமென்றால், அதற்குக் காலம் பார்த்துக் காத்திருந்து தக்க நேரம் வந்தபோதுதான் செய்வார்கள். ஆனால் புல்லறிவுடைய ஒருவன் தனக்கு எக்காலமும் துன்பத்தையே வரவழைத்துக்கொள்வானாம்.

வறுமைத் துன்பம், பழி, பாவம் முதலியனவற்றைப் பகைவர்கள் எக்காலமும் செய்துகொண்டிருக்க முடியாது. இப்படிப்பட்ட துன்பங்களை அறிவில்லாதவன் தானே வரவழைத்துக்கொள்ளுகின்றான். ஆகையால், பகைவர்களாலும் செய்ய முடியாத பிழையினைத் (துன்பத்தினை) தானே வரவழைத்துக்கொள்கின்றான் என்று நயமாகக் கூறிவைத்தார்.

பகைவர்கள் உண்டாக்குகின்ற தீமை குறிப்பிட்ட ஒரு காலத்தில்தான் உண்டாகும் என்பது மட்டுமன்று; குறிப்பான ஒருவகைத் துன்பமாகத்தான் இருக்கமுடியும். ஆனால் அறிவில்லாதவன் தனக்குத் தானே வரவழைத்துக் கொள்ளுகின்ற துன்பம் எக்காலத்திற்கும் உண்டாவதாகிவிடும் என்பது மட்டுமல்லாமல் எல்லா விதமான துன்பங்களாகவும் இருக்கும் என்பதும் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

ஆதலால்தான் நன்கு ஆராய்ந்தறிந்த உண்மையினைத் தெளிவுபடுத்தி ஆசிரியர், ‘பகைவர்களாலும் செய்ய முடியாத துன்பத்தினை அறிவில்லாதவன் செய்துகொள்ளுகிறான்’ என்றார்.

இவ்வாறு காரணங்கண்டு துன்பங்கள் வருவதுண்டு என்றாலும், அறிவும் ஆற்றலும் சிறந்த பண்பாடும் ஆகிய நல்லியல்புகள் கொண்டவர்களுக்கும் துன்பங்கள் வருவதுண்டு. இவைகளுக்குத் துன்பப்படுகின்றவர்கள்தான்