பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

பொறுப்பாளர்கள் என்று சொல்லமுடியாத நிலைமை ஏற்படலாம்.

அவ்வாறு துன்பங்கள் ஏற்படுகின்றபோது அவைகளை இயற்கை என்று தான் கூறிக்கொள்ளுதல் வேண்டும். ஊழ்வினையால் ஏற்படுபவை என்று சொன்னாலும் தவறில்லை என்போம். இப்படி நேரிடுகின்ற நிகழ்ச்சிகளை வாழ்க்கையில் எத்தனையோ கண்டு வருகின்றோம்.

இடுக்கண்:

‘துன்பம்’ என்ற சொல்லினைச் சொல்லாமல் ‘இடுக்கண்’ என்ற சொல்லினால் சொல்லப்படும் இடம் ஆழ்ந்த கருத்தொன்றினை விளக்குகின்றது. தாங்க முடியாத துன்பம் உண்டாகின்ற காலத்தில் கண் சுருங்கி-கண்களைச் சுருக்கி—வேதனைப்படுவதுண்டு. அதனால்தான் கூர்மையான துன்பத்தினை இடுக்கண் என்கிறார்.

அரிய உறுப்பு கண்ணன்றோ? உண்மைகளை எளிதாக உணர்த்துவது கண்தானே! கண்களை வைத்துச் சொல்லுகிறபோது ஆசிரியர், வன்கண், புன்கண், தறுகண், உண் கண், இன் கண் என்று இவ்வாறெல்லாம் பல நயங்களை உணர்த்துகின்றார்.

இங்ஙனம், ஒருவருக்குத் துன்பம் இயற்கையாக வந்தபோது அத் துன்பத்தினின்றும் எவ்வாறு தப்பித்துக்கொண்டு சமாளித்தல் வேண்டும் என்பதற்கு வழிசொல்லித் தருகின்றார். அதற்கான குறட்பாவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அக் குறட்பாவில்தான் நகைத்தல் என்ற கருத்தும் கூறப்படுகிறது.

“இடுக்கண் வருங்கால் நகுக” என்று, அக் குறட்பா ஆரம்பமாகின்றது. இயல்பாகவே துன்பம் வருகின்றது என்றால் மனம் தளர்ந்து போகாதே என்று ஆசிரியர் சொல்லி நிறுத்திவிடவில்லை. ‘நகுக’ என்று கூறினார். ‘சிரிக்கவும்’ என்பது தான் அதற்குண்டான பொருளாகும்.