பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

துன்பம் வந்தபோது சிரித்துக்கொண்டிருந்தால் என்ன நிலைமை ஏற்படும்? ஆழ்ந்து மூழ்கிய அவலநிலை ஏற்பட்டுவிடுமே!

எனவேதான் துன்பத்திற்கு இரையாகிவிடாமல் இருக்க, ‘நகுக’ என்றார். நகைத்தல் எவ்வளவு மிகப்பெரிய உதவியாக இருக்கின்றதென்பதனை நாம் அறிதல் வேண்டும். ஒருவனுக்கு இடுக்கண் வந்தபோது அவன் அறிவினை இழந்துவிடுபவனாகின்றான். ஏன்? இடுக்கண் முதலில் அறிவினைக் கவ்விக்கொள்ளுகிறது. மேற்கொண்டு அவன் சிந்தித்துச் செயல்பட முடியாதபடி செய்து விடுகிறது. மன எழுச்சி தடைப்படுத்தப்பட்டுவிடுகிறது, இப்படிப்பட்ட இடையூறுகளைத் தடுத்து நிறுத்தவே ‘உள் மகிழ்தல் வேண்டும்’ என்றார் ஆசிரியர்.

துன்பம் நீங்கிய பிறகுதானே சிரித்து மகிழ்தல் வேண்டும். துன்பம் வருகின்றபோதே ‘நகுக’ என்று கூறுகிறாரே என்பது போன்ற ஐயப்பாடு நமக்குத் தோன்றுதல் இயல்புதான்! துன்பத்தினைக் கண்டு உள் மகிழ்வதால் வருகின்ற துன்பம் அவனைத் தாக்குகின்ற அச்சம் குறைக்கப்படுகிறதென்பது குறிப்பு.

ஆதலால்தான் ‘நகுக’ என்று உறுதிப்படுத்திக் கூறுகின்றார். இவ்வாறு உள்மகிழ்தலால் இடுக்கணை எதிர்த்துப் போராடும் ஆற்றல் உண்டாகிவிடுகின்றது. இவ்வாறு நகைத்து மனவெழுச்சி பெற்றவுடன் துன்பம் தொலைக்கப்பட்டு மேலும் மேலும் இன்பம் வருதலால் ‘அதனை அடுத்தூர்வது அஃது ஒப்பது இல்’ என்பதாக அக்குறட்பா முடிகிறது.

‘அதனை’ என்று குறிப்பாக நகைத்தல் செய்தலினை உணர்த்தினார். பின்னர் வருகின்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்பதை ‘அஃது ஒப்பது இல்’ என்ற சொற்களினால் அறிகின்றோம். குறட்பா அழகாக அமைந்து கிடக்கின்றது.