பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்துஊர்வது அஃதுஒப்பது இல்

நகைத்து மகிழ்தல் என்பது வாழ்க்கைப் பாதையில் எவ்வளவு இன்றியமையாதது என்பது தெள்ளத்தெளிய உரைக்கப்பட்டது. எனவே, துன்பத்தினைக் கண்டு நடுங்காமல், மனம் தளராமல், அறிவினைப் பறிகொடுக்காமல் சிறிது உள்ளுக்குள்ளாகவே சிரித்துக்கொண்டு மனவெழுச்சி கொண்டு ஆற்றல் பெற்றுத் துன்பத்தினை விரட்டி வெற்றி பெறுதல் கடமை என்பதனை அறிந்தோம்.

வெகுளிச் சிரிப்பு:

துன்பத்தில் சிரிப்பு வரவேண்டும் என்னும் புதுமை போல வேறுபல அருமையான உண்மைகளை ஆசிரியர் நமக்குத் தருகின்றார். நகுதல் என்னும் அரிய பண்பாட்டினைக் கெடுக்கின்ற ஒன்று உண்டு என்றால் வியப்புடன் சிந்தித்துப் பார்ப்போம்.

மனித வாழ்க்கையில் மிகமிகக் கொடிய குணம் என்பது வெகுளியாகும். இதனைச் சினம் என்றும், கோபம் என்றும் பலவிதமாகக் கூறுவோம். கோபத்தினை நெருப்பு என்று குறிபிட்டுக் கூறுதல் உலக இயல்பு, ஏனென்றால் தான்தொட்ட பொருள்களை எரித்துச் சாம்பலாக்கிவிடுவது போல, கோபம் எந்தவொருவன் வாழ்க்கையில் குடிகொண்டுள்ளதோ அவனை அழித்தே ஒழித்துவிடும் என்பது கண்கூடு.

ஆதலால் தான் கோபத்தினை அறவே நீக்கப் பக்குவமாக அதனுடன் பழகுதல் வேண்டும் என்றும் கூறப்படும். மக்களுக்குள்ள ஏனைய நல்ல குணங்களையெல்லாம் கெடுத்துவிடுகின்ற இயல்பு கோபம் என்னும் குணத்திற்கு உண்டு. கோபத்தினைக் கொடிய பகைவன் என்றே ஆசிரியர் வள்ளுவனார் குறிப்பிட்டுவிடுகிறார்.